செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Published On 2020-11-30 22:28 GMT   |   Update On 2020-11-30 22:28 GMT
கொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டங்களில் உள்ளன. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தடுப்பூசி கிடைக்கும் எனவும், ஜூலை மாதத்துக்குள் 25 கோடி பேருக்கு போடுவதற்காக 40 கோடி முதல் 50 கோடி டோஸ்கள் வரை தயாரிக்க முடியும் என மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இவ்வாறு தயாராகும் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு போடப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான முன்கள போராளிகளாக அறியப்படும் இந்த பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எனவே தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் வந்தனா குர்னானி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘தடுப்பூசி தயாரானவுடன் போடுவதற்கான மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை அடையாளம் காண வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதற்கான எண்ணிக்கையை நிறைவு செய்யும் வகையில் மேற்படி பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களையும் மாநிலங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News