செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா

சென்னை, டெல்லியில் நடமாடும் ஆஸ்பத்திரிகள்- மத்திய அரசு அமைக்கிறது

Published On 2021-10-27 03:15 GMT   |   Update On 2021-10-27 03:15 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது, நாட்டில் சுகாதார கட்டமைப்புகளை, பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது என்று மத்திய சுகாதார மந்திரி கூறினார்.
புதுடெல்லி:

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கண்டெய்னர் அடிப்படையிலான 2 நடமாடும் ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும். இந்த ஆஸ்பத்திரிகள் சென்னையிலும், டெல்லியிலும் ஏற்படுத்தப்படும். இவை, எந்த அவசரத்துக்கும் எந்த இடத்துக்கும் செல்ல முடியும்.

இவற்றில் தலா 100 படுக்கை வசதிகள் இருக்கும். இவற்றை அவசர காலத்தில் விமானத்திலும், ரெயில்களிலும் எடுத்துச்செல்லவும் இயலும்.

தெற்காசியாவில் இப்படி கண்டெய்னர் அடிப்படையிலான நடமாடும் ஆஸ்பத்திரிகள் ஏற்படுத்தப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். ஆஸ்பத்திரிக்குரிய அனைத்து வசதிகளும் இந்த நடமாடும் ஆஸ்பத்திரியில் உண்டு.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது, நாட்டில் சுகாதார கட்டமைப்புகளை, பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது.



கோவேக்சின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டு பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்ப்பது பற்றி கேட்கிறீர்கள். அங்கு இதற்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. ஒரு தொழில்நுட்ப குழு உள்ளது. இந்த குழு கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மற்றொரு குழுவின் மதிப்பீட்டுக்கு சென்றுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு என்ன விலை வைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ஏஒய்.4.2. தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமும் (என்.சி.டி.சி) ஆராய்ந்து வருகின்றன.

பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும். இதன் நோக்கம், பொது சுகாதார உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புவது ஆகும். குறிப்பாக முக்கியமான பராமரிப்பு வசதிகளையும், நகர்ப்புற, கிராமப்புறங்களில் முதன்மையான வசதிகளையும் ஏற்படுத்துவது ஆகும். மேலும், அதிக கவனம் செலுத்தப்படும் 10 மாநிலங்களில் 17 ஆயிரத்து 788 கிராமப்புற சுகாதார, நல்வாழ்வு மையங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

அனைத்து மாநிலங்களிலும் 11 ஆயிரத்து 24 நகர்ப்புற சுகாதார, நல்வாழ்வு மையங்கள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் நிருபர்களிடம் பேசும்போது, பிராந்திய அளவில் 4 தேசிய வைரலாலஜி நிறுவனங்களும், ஒரு சுகாதார தேசிய நிறுவனமும் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.


Tags:    

Similar News