செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே பட்டா வழங்கக்கோரி தொழிலாளி நூதன போராட்டம்

Published On 2018-09-06 12:00 GMT   |   Update On 2018-09-06 12:00 GMT
பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி பெயரில் பட்டா வழங்கக்கோரி அவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவர் பவர் டில்லர் ஓட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊர் அருகே சொந்தமாக காலியிடம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளார். இந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா வழங்கக்கோரி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே மனு செய்துள்ளார். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து அவர் பாவூர்சத்திரம்- சுரண்டை ரோட்டில் உள்ள கீழப்பாவூர் பகுதி-1 கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர் இதுவரை அனுப்பிய மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கழுத்தில் கட்டித் தொங்க விட்டு கொண்டு உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக தெரிவித்தார்.

இதை அறிந்து அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி ஞானக்கண் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினரை அழைத்து பேசினர். அதன்படி விரைவில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #tamilnews
Tags:    

Similar News