செய்திகள்
கலெக்டர் ஆனந்த்

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-10-31 13:30 GMT   |   Update On 2019-10-31 13:30 GMT
திருவாரூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள், விவசாய நிலங்கள் , நகராட்சி - பேரூராட்சி -கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாட்டில் இல்லாமல் ஆபத்தான நிலையில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் இருப்பின் அது தொடர்பான தகவலை பொதுமக்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டும்.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகளை சம்மந்தப்பட்ட நில உரிமையாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

வருவாய் துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் உள்ள ஆபத்தான ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் தனியார் நிலங்களில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் திறந்தவெளி கிணறுகள் கண்டறியப்பட்டால் சம்மந்தப் பட்ட நில உரிமையாளர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறாமல் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், புதிய கிணறுகள் தோண்டுதல் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், புணரமைப்பு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டால் உரிமையாளர் மீதும் அப்பணியை மேற்கொள்பவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News