செய்திகள்
கைது

மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது

Published On 2021-09-21 08:58 GMT   |   Update On 2021-09-21 08:58 GMT
உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கம்பம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் சிசோர் குமார் 10 ஆண்டுகளுக்கான தனது சம்பள உயர்வு, பணி ஊக்க உயர்வு குறித்து இந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சமாக அளித்தால் பணப்பலன்களை பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிசோர்குமார் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். டி.எஸ்.பி. கருப்பையா அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 5 ஆயிரம் அடங்கிய நோட்டுகளை அருண்குமாரிடம் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் அவரை கைது செய்து அவரது சொந்த ஊரான கூடலூருக்கு சோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.
Tags:    

Similar News