லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி உடலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்

Published On 2020-09-28 03:05 GMT   |   Update On 2020-09-28 03:05 GMT
இரண்டு முறையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் உடலுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, உடற்பயிற்சி. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கு சென்று பலர் உடற்பயிற்சி செய்கிறார்கள். காலை, மாலை இரண்டு வேளையும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி இரண்டு முறையும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது பெரும்பாலும் உடலுக்கு பொருத்தமாக இருப்பதில்லை. ஏனெனில் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

காலை, மாலையில் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்? மற்ற நேரங்களில் என்ன மாதிரியான வேலை பார்க்கிறீர்கள்? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடற்பயிற்சி விஷயத்தில் ஒவ்வொருவரின் உடல்வாகு, உடல் வலிமை வேறுபடக்கூடும்.

பொதுவாக விளையாட்டு வீரர்கள், மல்யுத்த வீரர்கள் தினமும் இரண்டு முறை உடற் பயிற்சி செய்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதேவேளையில் அவர்களை போல் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தினமும் இரண்டு முறை மற்றவர்கள் செய்வது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். குறைந்த எடை கொண்ட உபகரணங்களை கையாளும் பயிற்சிகள் அல்லது மென்மையான உடற்பயிற்சிகளை வேண்டுமானால் தினமும் இரண்டு முறை செய்யலாம். அதுவும் காலையில் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்தால் மாலையில் இலகுவான உடற்பயிற்சிகளை செய்வதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

உடலில் காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பான உடற்பயிற்சி விதிகளை அறிந்து கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளக்கூடும். இதய துடிப்பு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஹார்மோன் சமநிலையில் பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே உடல் திறனுக்கு ஏற்ப உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நீண்ட நேரம் கடின பயிற்சிகளை செய்வது ஆயுட்காலத்தையும் பாதிக்கும். ஆர்வமிகுதியில் ஒரே நாளில் பல உடற்பயிற்சிகளை செய்தால் தசை வலி, நடப்பதில் சிரமம், முதுகெலும்பு பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

தினமும் இரண்டு முறை உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் பயிற்சிகளை இரண்டு பிரிவாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஜிம்முக்கு செல்பவர்களாக இருந்தால் கார்டியோ, உடல் வலிமை பயிற்சி, எடை பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கிய சற்று கடினமான உடற்பயிற்சிகளை காலையில் செய்யலாம். மாலையில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை உடலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்காமல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும்.
Tags:    

Similar News