செய்திகள்
சேறும், சகதியுமான சாலை

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி நெல்லையில் மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

Published On 2020-11-21 08:24 GMT   |   Update On 2020-11-21 08:24 GMT
நெல்லையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில நாட்களாக நெல்லை மாநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை டவுன், காட்சி மண்டபம், சேரன்மாதேவி சாலை, குற்றாலம் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குற்றாலம் ரோடு, பாளையங்கோட்டை ஜெபா கார்டன், வி.எம்.சத்திரம், தியாகராஜ நகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொண்டர் சன்னதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதேபோல் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் நெல்லை டவுன் வழுக்கோடை பகுதியில் அந்தப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் துணை தாசில்தார் குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் மறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் தரப்பில் இன்னும் 4 நாட்களில் தற்காலிக சாலைகள் அமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலுக்கு முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News