செய்திகள்
கோயம்பேட்டில் புதிதாக திறக்கப்பதற்கு தயாராக உள்ள மேம்பாலத்தை படத்தில் காணலாம்.

கோயம்பேடு புதிய மேம்பாலம் விரைவில் திறக்க ஏற்பாடு

Published On 2021-08-24 10:18 GMT   |   Update On 2021-08-24 10:18 GMT
கோயம்பேடு 100 அடி சாலையில் ரூ.94 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:

சென்னை கோயம்பேடு 100 சாலை காளியம்மன் கோயில் சாலை சந்திப்பில் கார், பஸ், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் பல ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல மணிக்கணக்கில் கால விரயம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த கடும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 100 அடி சாலை காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து, புதிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக தமிழக அரசு ரூ.94 கோடி ஒதுக்கீடு செய்தது.

புதிய மேம்பால கட்டுமானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்தது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பின் இந்த பணிகள் மீண்டும் தீவிரமாக தொடங்கப்பட்டு நிறைவு கட்டத்தை எட்டியது. மேம்பால பணிகள் தற்போது முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் இந்த புதிய மேம்பாலம் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாலம் திறப்பு விழா தேதி தமிழக அரசு சார்பில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோயம்பேடு 100 சாலையில் இருந்து காளியம்மன் கோயில் சாலை, அங்கிருந்து புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதி, அங்கிருந்து மாநில தேர்தல்ஆணையம் வரை என 3 கட்டங்களாக பிரித்து மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பணிகள் நடக்காததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு அடைந்துள்ளது. பாலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News