செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 65 பேர் கைது

Published On 2021-02-24 21:52 GMT   |   Update On 2021-02-25 09:58 GMT
தனியார் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 என இருப்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தனியார் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டம் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால் மற்றும் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கிடையே நேற்று காலை 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் திடீரென பல்லடம் ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மறியல் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து, வீரபாண்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News