செய்திகள்
இஸ்ரோ தலைவர் கே.சிவன்

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Published On 2021-02-21 19:40 GMT   |   Update On 2021-02-21 19:40 GMT
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வின் பல விண்வெளி திட்டப்பணிகள், கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில், விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் முதலாவது திட்டமான ககன்யானும், நிலவுக்கு ‘சந்திரயான்-3’ விண்கலத்தை அனுப்புவதும் அடங்கும்.

கடந்த ஆண்டு இறுதியில் ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவத் திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான்-3 திட்டம், தள்ளிப்போய்விட்டது.

இந்நிலையில் அதுதொடர்பாக ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘‘நாங்கள் சந்திரயான்-3 திட்டப்பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். இது, சந்திரயான்-2 மாதிரியே உள்ளமைவைக் கொண்டிருக்கும். ஆனால் இதற்கு ‘ஆர்பிட்டர்’ இருக்காது. சந்திரயான்-2 உடன் ஏவப்பட்ட ஆர்பிட்டரே ‘சந்திரயான்-3’-க்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும். அதை நோக்கி ஒரு முறையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அனேகமாக, அடுத்த 2022-ம் ஆண்டுவாக்கில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

ககன்யான் திட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அது, இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்.

ககன்யானின் பிரதானமான மூன்றாவது கட்டத்தில், 2022-ம் ஆண்டில் 3 இந்திய வீரர்கள் விண்வெளிக்கு அனுப்ப எண்ணியிருக்கிறோம். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பயிற்சி பைலட்டுகள் தற்போது ரஷியாவில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை பொறுத்தவரை, நிறைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அனைத்து தொழில்நுட்பங்களும் மிகச் சரியாக இருக்கின்றன என்று உறுதி செய்யப்பட்ட பின்பே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாளை நாங்கள் முடிவு செய்வோம்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

வேற்றுக் கிரகங்களில் லேண்டரை இறக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், சந்திரயான்-3, இஸ்ரோவைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகும்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி ஏவப்பட்ட சந்திரயான்-2 மூலம், சந்திரனின் அறியப்படாத தென்துருவப் பகுதியில் ஒரு ‘ரோவரை’ இறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த ஆண்டு செப்டம்பர் 7-ல் நிலவின் பரப்பில் மோதிய விக்ரம் லேண்டரால், தனது முதல் முயற்சியிலேயே நிலவுப் பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் இந்தியாவின் கனவு தகர்ந்துபோனது.
Tags:    

Similar News