செய்திகள்
பட்டாசு வெடித்து தீ விபத்து

தீபாவளி பட்டாசு வெடித்து 6 இடங்களில் தீ விபத்து

Published On 2019-10-28 10:23 GMT   |   Update On 2019-10-28 10:23 GMT
புதுவையில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடித்து 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பே பட்டாசு வெடிக்க தொடங்கி தீபாவளி அன்று இரவு 12 மணி வரை பட்டாசு வெடிப்பது நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாகவும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் போடாததன் காரணமாகவும் தீபாவளி பட்டாசு வெடிப்புகள் அவ்வளவாக களைகட்டவில்லை.

ஆயினும் ஒரு சில இடங்களில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்தனர். இந்த பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சில இடங்களில் வீடுகள், மரங்கள் தீ பிடித்து எரிந்தது. அந்ததந்த பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உடனுக்குடன் விரைந்து வந்து தீயிணை அணைத்தனர்.

புதுவை வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது கூரை வீட்டில் நேற்றிரவு அப்பகுதியை சேர்ந்த சிலர் கொளுத்திய ராக்கெட் விழுந்ததில் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ 10 ஆயிரம் அளவில் சேதம் ஏற்பட்டது.

இதேபோல் அங்காளம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது கூரை வீட்டில் பட்டாசு வெடித்த தீப்பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் 6 ஆயிரம் ருபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

முருங்கப்பாக்கம் அன்னை தெரேசா நகரில் குணசீலன் என்பவரது கோழிக்கடை கூரை பட்டாசு வெடித்ததில் தீ பிடித்து எரிந்தது. இதில் கூரை மட்டுமே சேதமடைந்தது.

காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் விஜயன் என்பவரது கூரை வீடு எரிந்ததில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. திருபுவனையில் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. பாகூரில் விசாலாட்சி என்பவரது கூரை வீடு எரிந்து ரூ. 15 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

திருக்கனூர் மணவெளியில் தென்னை மரம் ஒன்றின் மீது பட்டாசு வெடித்ததில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. இதேபோல் மணமேடு பகுதியில் சரவணன் என்பவரது தென்னை மரத்தில் ராக்கெட் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

புதுவை, கோரிமேடு, பாகூர், வில்லியனூர் உள்ளிட்ட அனைத்து தீயணைப்பு நிலைய வீரர்களும் தயாராக இருந்து அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட தீயை உடனுக்குடன் அணைத்தனர்.

Tags:    

Similar News