லைஃப்ஸ்டைல்
குழந்தைக்கு இணை உணவு எப்போது கொடுக்க வேண்டும்?

குழந்தைக்கு இணை உணவு எப்போது கொடுக்க வேண்டும்?

Published On 2019-08-14 06:33 GMT   |   Update On 2019-08-14 06:33 GMT
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.
தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைக்கு 4-5 மாதங்கள் ஆனவுடன் வாயில் உமிழ்நீர் ஒழுக ஆரம்பித்து விடுகிறது. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வாயில் வைத்து கடித்துப் பார்க்கிறது. தாய்ப்பால் தவிர மற்ற திட, திரவ உணவுகளை கொடுக்கும் நேரம் வந்து விட்டது. அவ்வாறு கொடுக்கும் உணவுகள் எல்லாமே இணை உணவுகள்தான்.

குழந்தையின் ஜீரண மண்டலம் தாய்ப்பால் தவிர மற்ற திட உணவுகளையும் ஜீரணிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது. 6 மாதம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து விட்டு பிறகு இணை உணவை ஆரம்பிக்கலாம். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிக்கும் போது, குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சி குறைவாக இருந்தால், இணை உணவுகளை 4-ம் மாதமே கொடுக்க ஆரம்பிக்கலாம்.

முதல் ஆறு மாதங்கள் வளர்வதற்கு தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் மட்டுமே போதும். அதற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு அதிகப்படியான கலோரிகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், தேவைப்படுவதால் இணை உணவு முக்கியமானதாக ஆகிவிடுகிறது.

சரியான காலத்தில் இந்த இணை உணவை அறிமுகப்படுத்தாமல் காலம் கடந்து அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு சத்துக் குறைவு ஏற்பட்டு இரத்த சோகை, வளர்ச்சியில் குறைவு முதலியன வந்து விடும். தேவையெனில் மட்டுமே ஆறு மாதங்களுக்கு முன்பு இணை உணவு கொடுக்க வேண்டும்.

அதற்கு முன்பு அறிமுகப்படுத்தினால் குழந்தைக்கு தாய்ப்பாலின் சத்துக்கள் சென்றடையாது. மேலும் குழந்தைக்கும் இணை உணவு ருசியால் தாய்ப்பாலின் மீது உள்ள நாட்டமும் குறைந்து விடும். இணை உணவுகள் குழந்தைக்கு உணவை மென்று முழுங்கும் திறமையை மெல்லக் கற்றுக் கொடுக்கிறது. சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளை இணை உணவாக கொடுங்கள்.
Tags:    

Similar News