செய்திகள்
ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்- புறநகர் மின்சார ரெயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2021-11-15 07:54 GMT   |   Update On 2021-11-15 07:54 GMT
தாம்பரம், செங்கல்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் அலைமோதிய கூட்டத்தை காண முடிந்தது.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மின்சார ரெயில் பயணத்துக்கு இருந்த கட்டுப்பாடுகளும் இன்று முதல் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. கூட்ட நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்கள் பயணம் செய்ய அனுமதிக்காத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் அனைத்து புறநகர் மின்சார ரெயில்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் பயணிகள் முழுமையாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எந்நேரமும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சீசன் டிக்கெட், ரிட்டன் டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் எடுப்பதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார ரெயில்களில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி- சூலூர்பேட்டை, கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ஆகிய 4 மார்க்கங்களிலும் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி இருந்தது.

கடந்த ஒரு வாரமாக கனமழை பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை குறைந்து நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

பள்ளி-கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி வியாபாரிகள், பெண்கள் போன்றவர்களும் அதிகளவு பயணம் செய்தனர். டிக்கெட் எளிதான முறையில் எடுத்து பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கடந்த 1ž வருடத்துக்கு பிறகு இன்று வழங்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் சாதாரணமாக பயணம் செய்ய முடிந்தது.

மின்சார ரெயில்கள் அனைத்து வழித்தடங்களிலும் முழு அளவில் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் வழக்கமான சேவை தொடங்கி உள்ளது.



புறநகர் பகுதி மக்களை சென்னை நகரத்தோடு இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் இருப்பதால் லட்சக்கணக்கானவர்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அதிகரிப்பால் ரெயில் நிலையங்கள் பரபரப்பாகி உள்ளது. ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், கொருக்குப்பேட்டை, திருத்தணி உள்ளிட்ட புறநகர் ரெயில் நிலையங்களில் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனர்.

இதேபோல் தாம்பரம், செங்கல்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் அலைமோதிய கூட்டத்தை காண முடிந்தது.

ஒரு சில ரெயில்களில் கடந்த காலங்களை போல பயணிகள் தொங்கிக் கொண்டு பயணம் செய்ததை காண முடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மின்சார ரெயில் பயணம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு மின்சார ரெயில்களில் பயணிகள் கட்டுப்பாடு இல்லாமல் பயணம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

Similar News