ஆன்மிகம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தபடம்.

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடக்கம்

Published On 2021-01-29 08:12 GMT   |   Update On 2021-01-29 08:12 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா வருகிற 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்குகிறது.

இதைத் தொடர்ந்து 12-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி, 14-ந்தேதி சாமி சாட்டுதல், 16-ந்தேதி கோவில் நிர்வாகம் சார்பில் மாசித்திருவிழா கொடியேற்றமும் நடைபெறுகின்றன. இதையடுத்து 27-ந்தேதி அம்மனின் தசாவதார நிகழ்ச்சியும், மார்ச் 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கொடி இறக்கமும், 2-ந்தேதி கோட்டை மாரியம்மனின் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழாவின் போது சாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதில் கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் நகர் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார். ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், இந்த ஆண்டு மாசித்திருவிழாவில் சாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் ஒவ்வொரு நாளும் கோவில் வெளிப்பிரகாரத்தில் சாமி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதோடு தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள், கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

இதற்கிடையே மாசித் திருவிழாவையொட்டி நேற்று காலை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபா‌ஷினி, பரம்பரை அறங்காவலர்கள் பாலசுந்தரம், பாலகுரு, கணேசன், சண்முக முத்தரசப்பன், மகாலட்சுமி, கண்ணன், கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News