ஆன்மிகம்
லட்சுமி

பாற்கடலில் தோன்றிய லட்சுமி

Published On 2020-07-31 09:45 GMT   |   Update On 2020-07-31 09:45 GMT
மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
ஆதிபராசக்தி தன்னிடமிருந்து தன்னைப்போலவே சக்திகள் கொண்ட இரு தேவிகளை உருவாக்கினார். அவரது இடது பாகத்திலிருந்து தோன்றியவள் ரமாதேவி; வலது பாகத்திலிருந்து தோன்றியவள் ராதா தேவி.

‘ரமா’ என்றால் மிகவும் அழகானவள் என்று பொருள். ரமா தேவியை ஆதிபராசக்தி ‘மகா லட்சுமி’ என்று பெயரிட்டு அழைத்து, அவளை மகாவிஷ்ணுவிடம் மனைவியாக ஒப்படைத்தார். மகாலட்சுமி அப்போது செல் வத்தின் நாயகியாகச் செயல் படுவாள் என்று தேவி பாகவதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவள் அன்பின் வடிவம் என்றும், விஷ்ணு பத்னி என்றும், விஷ்ணுவுக்கு சேவை செய்யும் தேவி என்றும்தான் தேவி பாகவதம் கூறுகிறது.

மகாலட்சுமியின் தோற்றம் பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துர்வாச மகரிஷியின் சாபத்தால் தேவேந்திரன் முதலான தேவர்கள் தங்கள் பதவிகளை இழந்தனர். தேவலோகச் செல்வங்கள் யாவும் மறைந்தன. தேவலோக ஐஸ்வர்யங்களுக்கு ஆதாரமான ஸ்வர்க்க லட்சுமியும் தேவ லோகத்தைத் துறந்து மகாலட்சுமியுடன் ஐக்கியமானாள்.

பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் வைகுண் டம் சென்று, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவமியற்றினர். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்தனர். காக்கும் கடவுளான விஷ்ணு மனமிரங்கி வரமளித்தார். ‘’நீங்கள் இழந்த செல்வங்களைப் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு வழிகோல நீங்கள் பாற்கடலைக் கடைய வேண்டும்.

அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரண மில்லாப் பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌ பாக்யங்களையும், செல் வங்களையும் பெற அருள்புரிவாள்’’ என்று மகா விஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார். இதையடுத்து பாற் கடலைக் கடையும் பணி தொடங்கியது. முதலில், ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து சிவனாரை வேண்ட, சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார்.

பாற்கடலைக் கடையும் பணி மீண்டும் தொடர்ந்தது. பாற்கடலிலிருந்து அபூர்வமான பல வஸ்துக்களும் ஜந்துக்களும் தோன்றின. முடிவில், ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும் அசுரர் களும் அவள் அழகைக் கண்டு மயங்கி, அவளை அடைய விரும்பி னார்கள். அப்போது மகாலட்சுமி, ‘’என்னை அடைய வேண்டும் என்று விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுக்கப்போவதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும் ஒருவரையே நான் சரணடைவேன்’’ என்று கூறினாள்.

அதன்படி, எதனாலும் பாதிக்கப் படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள். பிரம்ம வைவர்த்த புராணத்தில் மகாலட்சுமியின் பெருமை விளக்கப்படுகிறது. அவளைப் பற்றி பிரம்மதேவனே தேவர்களுக்கு இப்படிக் கூறுகிறார்... ‘’எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங் கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

எனவே, தேவர்கள் தர்மத்தையும், ஒழுக்கத் தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்’’ என்பது பிரம்மதேவனின் வாக்கு. ‘’மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள்’’ என்றும் பிரம்மதேவன் தேவர்களிடம் கூறினார்.

மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள், அவளை பக்தியோடு சரணடைந்தார்கள். அப்போது, அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளிவீசியது. தேவர்கள் அவள் துதிப் பாடி மகிழ்ந்தனர். திசைக் காவல் புரியும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவர் குபேரன். அவர் வடதிசைக் காவலன். சிறந்த சிவபக்தரும்கூட! தேவலோகச் செல்வங்கள் அனைத்தையும் பாதுகாத்து, தகுதியானவர்களுக்குச் சரியான தருணத்தில் அந்தச் செல்வங்களை வழங்கும் அதிகாரம் அவருக்குத் தரப்பட்டது. மகாலட்சுமி கடாட்சம் பெற்றவர்களுக்கு நவநிதியையும் வழங்குகிறார் குபேரன்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் வழங்கும் செல்வங்கள் நவநிதியில் அடங்கும். மகாலட்சுமியின் அருட்பார்வை பெற்றவர்களுக்கு உலகியல் செல்வங்களோடு நிம்மதியும், சாந்தியும் கிடைக்க குபேரன் வழிசெய்கிறார். பேராசையும் அதர்மமும் மிக்க மனிதர்கள் சிலருக்கும் உலகியல் செல்வங்கள் இருக்கலாம்.

அது, அவர்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக இருக்கலாம். ஆனால், சத்யமும் நேர்மையும் இல்லாதவர்கள் பெற்ற செல்வத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதில்லை. மகாலட்சுமி என்பவள் உலகியல் செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல; மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள்.
Tags:    

Similar News