செய்திகள்
ஆந்திரா வெங்காயம்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா வெங்காயம் 30 லாரிகளில் வந்தது

Published On 2019-11-04 09:02 GMT   |   Update On 2019-11-04 09:02 GMT
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் இருந்து 10 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் இன்று எதிர்பாராத விதமாக 30க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் வந்துள்ளது.
போரூர்:

கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் தினசரி விற்பனைக்கு வருகிறது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் திடீரென விலை அதிகரித்தது.

சில்லரை விற்பனையில் கிலோ ரூ.75க்கும் மொத்த விற்பனையில் கிலோ ரூ.65க்கும் வெங்காயம் விற்கப்பட்டது. வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக ஆந்திரா வெங்காயம் விற்பனைக்கு வந்து உள்ளது. தினசரி 10 லாரிகளில் வந்த ஆந்திரா வெங்காயம் இன்று 30 லாரிகளுக்கும் மேல் வந்தது. எனினும் வெங்காயம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

நேற்று 1 கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாசிக் வெங்காயம் இன்று ரூ.62-க்கும் இதேபோல் ரூ.46-க்கு விற்ற ஆந்திரா வெங்காயம் வரத்து அதிகம் காரணமாக இன்று ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி ஜி.எஸ் நடராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு சந்தைக்கு கடந்த இரண்டு நாட்களை விட இன்று வெங்காயம் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 60 லாரிகளில் மட்டுமே வந்த வெங்காயம் இன்று 75 லாரிகள் வரை வந்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து 10 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருவது வழக்கம். ஆனால் இன்று எதிர்பாராத விதமாக 30க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை தொடர்வதால் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News