லைஃப்ஸ்டைல்
முதுகு வலி, உடல் வலி தீர்க்கும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள்

முதுகு வலி, உடல் வலி தீர்க்கும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள்

Published On 2020-12-08 04:12 GMT   |   Update On 2020-12-08 04:12 GMT
உடல் வலி, முதுகு வலியை தவிர்ப்பதற்காக தற்போது எலும்பியல் மெத்தைகள், உடற்கூறியல் மெத்தைகள் எனப்படும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள் விற்பனைக்கு வருகின்றன.
ஆரோக்கியமான மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். சிலருக்கு வெறும் தரையில் படுத்ததும் தூங்கி விடுவார்கள். ஆனால் பலருக்கு அப்படியில்லை. ஏனென்றால் தரையின் வெப்பநிலை நம் தூக்கத்தை தடுத்து விடக்கூடும். அதற்காக தான் பாய், தரைவிரிப்பு பயன்படுத்தினோம். பிறகு வேறு சில காரணத்திற்காக கட்டில், மெத்தையை பயன்படுத்த துவங்கினோம். மெத்தையில் தூங்கினால் அருமையான தூக்கம் வரும். ஆனாலும் சிலருக்கு அதனால் உடல் வலி, முதுகு வலி போன்றவை வருகின்றன. அதனை தவிர்ப்பதற்காக தற்போது எலும்பியல் மெத்தைகள், உடற்கூறியல் மெத்தைகள் எனப்படும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள் விற்பனைக்கு வருகின்றன.

ஆர்த்தோபெடிக் மெத்தைகள் கண்டுபிடிக்க 1950 களிலிருந்து பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் முதுகுவலியில் துன்பப்படும், மூட்டுவலி உள்ளவர்களுக்கு பயன்படக்கூடிய மெத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் மனிதனின் எலும்புகள், முதுகு வடம், மூட்டுக்கள் மற்றும் தசையமைப்புக்கு தக்க அளவு தாங்கும் திறனை பெற்றிருக்கின்றன.

எலும்பியல் மெத்தைகளில் படுக்கும்போது உடல் முழுவதும் தேவையான அழுத்தத்தை பகிர்ந்தளிக்கின்றன. இதனால் படுக்கும் விதத்தை சரி செய்வதோடு மரத்துப் போதல், முதுகு வலி போன்றவை தடுக்கப்படுகின்றன. இதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெத்தை பரப்பு உதவுகின்றது. பல காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு பல அடுக்கு கொண்ட மெத்தைகள் முதுகு வலி தொடர்பான பிரச்சினைகள் வராத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த வகையில் ஆரோக்கியமான தூக்கத்தை கொடுக்கக்கூடிய ‘நினைவக விளைவு’ (Memory Foam) கொண்ட மெத்தைகள் சந்தையில் வந்துள்ளன. இவை ஆச்சரியத்தக்க அளவில் தூங்கும் நபரின் வளைவுகளுக்கும், எடைக்கும் ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறது. அதோடு அந்நபரின் உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. இது நான்கு வித அடுக்குகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் குறிப்பிட்ட சிறப்பியல்பை கொண்டுள்ளன. முதல் அடுக்கு திறந்த செல் அமைப்புடைய நுரைப்பஞ்சால் ஆனது. இதன் மூலம் காற்று சென்று வருவதால் குளிர்ந்த வெப்பநிலையை நடைமுறைப்படுத்துகிறது.

இரண்டாம் அடுக்கு கலப்பு நுரைபஞ்சினால் செய்யப்பட்டது. இதனால் உடலின் எடைக்கு தக்க அழுத்தத்தை ஈடுசெய்ய முடிகிறது. எப்படி திரும்பி படுத்தாலும் அழுத்தம் சீராகி கழுத்து, முதுகு, மற்றும் இடுப்பு பகுதிகள் பாதிக்காதவாறு உதவுகிறது. மூன்றாவதாக மெமரி போம் அடுக்கு இருக்கின்றது. இது உடலின் அமைப்புக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று உடலில் மரத்துப் போதல், வலி ஏற்படாதவாறு செய்கின்றது. நான்காவதாக அதிக அடர்த்தியுடைய ஃபோம் அடுக்கு உள்ளது. இது ஒட்டுமொத்த மெத்தையின் கட்மைப்பை விளங்க செய்கின்றது.

எலும்பியல் மெமரி ஃபோம் மெத்தை ஒரு இரட்டை பக்க மெத்தை ஆகும். அதாவது ஒரு புறம் மென்மையாகவும், மறு புறம் உறுதியாகவும் இருக்கும். உறங்குபவரின் விருப்பத்திற்கு தக்க ஏதாவது ஒரு பக்கம் திரும்பி படுத்துக் கொள்ளலாம். மேலும் மெத்தை உரையை நீக்கி துவைத்த பின் மீண்டும் மாட்டுவதற்கு தக்க ஜிப் வசதியுடன் உள்ளது. இதனால், மெத்தையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முடியும். இத்தகைய ஆர்த்தோபிடிக் மெத்தைகள் சுத்தமாகவும், சுகமாகவும் உறங்குவதற்கு ஏற்ற மெத்தைகள் என்பதில் மிகையேதும் இல்லை.
Tags:    

Similar News