செய்திகள்
மாதிரிப் படம்

பொருளாதார போட்டித்திறனில் முதலிடத்தை இழந்த அமெரிக்கா- வர்த்தகப் போர்தான் காரணம்

Published On 2019-10-09 08:38 GMT   |   Update On 2019-10-09 08:38 GMT
வர்த்தகப்போர் காரணமாக உலக பொருளாதார போட்டித்திறனில் அமெரிக்கா முதலிடத்தை இழந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா:

உலக பொருளாதார மன்றம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள கோலொக்னி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது, நாட்டின் உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் எந்தெந்த நாடுகளின் பொருளாதாரங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை மதிப்பிட்டு வருடாந்திர போட்டித்திறன் அறிக்கையை 1979 முதல் வெளியிட்டு வருகிறது.

அவ்வகையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா தற்போதும் கண்டுபிடிப்புகளின் ஆற்றல் மையமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார போட்டித்திறன் அடிப்படையில் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது என்றும், வர்த்தக போர் மற்றும் டிரம்ப் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக சில சிக்கல்கள் எழுந்துள்ளன என்றும் கூறி உள்ளது.

இது குறித்து உலக பொருளாதார மன்ற மேலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்காவில் முதலீடு செய்தால் நல்லது என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருகிறது. மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக அமெரிக்கா தனது வர்த்தக நிலைத்தன்மையிலிருந்து சற்று சறுக்கியுள்ளது.  

இது நீண்ட கால முதலீட்டை பாதிக்கும். இது அமெரிக்கரல்லாத வணிகத் தலைவர்களின் (அமெரிக்காவின் மீதான) பார்வையை பாதிக்கும்’, என்று கூறினார். 

உலக பொருளாதார மன்ற அறிக்கையானது, நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொழிலாளர் சந்தை, நிதி அமைப்பு, பொது நிறுவனங்களின் தரம் மற்றும் பொருளாதார வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் போட்டித்தன்மையை 0 முதல் 100 புள்ளிகள் அளவில் மதிப்பிடுகிறது.

இதில் சிங்கப்பூர் 100 புள்ளிகளுக்கு 84.8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. உலகின் உயர்மட்ட பொருளாதாரங்கள் உடைய இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர்களால் சிங்கப்பூர் பயனடைந்துள்ளது. அமெரிக்கா 85.6 புள்ளிகளில் இருந்து 83.7 ஆக குறைந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஹாங்காங், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் முறையே மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஹாங்காங் பொருளாதார நிலை, அங்கு தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு முன்பு பெறப்பட்ட தகவல்களின்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News