செய்திகள்
கோப்புப்படம்

விக்கிரவாண்டி அருகே வாகன சோதனை- காரில் கொண்டு சென்ற ரூ.18 லட்சம் பறிமுதல்

Published On 2019-10-11 05:20 GMT   |   Update On 2019-10-11 05:20 GMT
விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படைகள் மற்றும் நிலைக்கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையினர் விக்கிரவாண்டி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிப்பண்ணை பஸ்நிறுத்தம் அருகில் இன்று அதிகாலை 5 மணியளவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது செஞ்சி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

உடனே காரை ஓட்டி சென்றவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது.

மேலும் கோவிந்தராஜ் கூறும்போது, தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு நகைகள் வாங்குவதற்காக சென்றதாகவும், ஆரணியில் உள்ள தனது உறவினர் வீடுகளில் பத்திரிக்கை வைத்து விட்டு வருவதாகவும் கூறினார். ஆனால் இந்த பணத்தை கொண்டு செல்ல எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லை.

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரத்தை தாசில்தார் பார்த்தீபன், வருவாய் உதவியாளர் தஸ்தகீர் பாரதிதாசன் ஆகியோர் துணை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News