செய்திகள்
வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

மேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு

Published On 2021-04-10 12:51 GMT   |   Update On 2021-04-10 12:51 GMT
மேற்கு வங்காளத்தில் இன்று வன்முறை நடந்த கூஜ்பெகர் மாவட்டத்தில் அதிக அளவாக 79.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று 4-வது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 44 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குச்சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின்படி, வன்முறை நடந்த கூஜ்பெகர் மாவட்டத்தில் அதிக அளவாக 79.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அலிபூர்தாரில் 73.84 சதவீதம், ஹூக்ளியில் 75.99 சதவீதம், ஹவுரா 75.35 சதவீதம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 75.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 



கூஜ்பெகர் மாவட்டம் சிடால்குச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவின்போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க மத்திய ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

இந்த துப்பாக்கி சூடு முன்கூட்டியேதிட்டமிடப்பட்டது என்றும், சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News