ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா

Published On 2021-02-26 05:01 GMT   |   Update On 2021-02-26 05:01 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாணவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாசி திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு அறம்வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் அம்மனுக்கு திருநீராட்டு வைபவம் நடந்தது. பின்னர், அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆஸ்ராமம் கிராமத்திற்கு எடுத்து வந்து ஆஸ்ராமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் திருக்கல்யாண வைபவம் சாப்பாடு நடைபெற்றது.

மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்தப் பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி மேளதாளம் முழங்க ஆஸ்ராமம் கிராமத்திலிருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூமாலை, திருமண பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலயசாமி கோவிலை வந்தடைந்தனர்.

இரவு 8 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் வீற்றிருக்க, அவரது முன்னிலையில் தாணுமாலயசாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேதமந்திரங்கள் முழங்க பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது.

திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலைச்சுருள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமா மகேஸ்வர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் இந்திரன் தேர் என்ற சப்பர தேரில் ரத உற்சவம் நடக்கிறது. இரவு ஆறாட்டு விழாவுடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News