செய்திகள்
பேருந்துகள் (கோப்பு படம்)

பேருந்தை திருடி 4 மாவட்டங்களை கடந்து சென்ற வாலிபர்... காரணம் இதுதான்

Published On 2021-05-12 07:20 GMT   |   Update On 2021-05-12 07:20 GMT
பேருந்தை திருடி கோழிக்கோட்டில் இருந்து மூன்று மாவட்டங்களை கடந்து சென்ற வாலிபர், கோட்டயம் மாவட்டத்தில் போலீசாரிடம் சிக்கினார்.
கோழிக்கோடு:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் தினூப் (வயது 30). இவர் கோழிக்கோட்டில் வேலைபார்த்து வந்தார்.  ஊரடங்கு அறிவிக்கபட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி குழந்தைகளுடன் இருக்க விரும்பினார். ஆனால் அவர் சொந்த ஊர் செல்ல பஸ் கிடைக்கவில்லை.

கோழிக்கோட்டில் இருந்து அவரது சொந்த ஊர் திருவல்லாவுக்கு 270 கிலோமீட்டர் 4 மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும். கோழிக்கோடு அருகே ஒரு பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ் ஒன்று நின்று கொண்டு இருந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. அந்த பஸ்சில் டீசலும் நிரப்பப்பட்டு இருந்தது. அந்த பஸ்சை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்.

ஆனால் இரவில் இரண்டு இடங்களில் போலீசார் அவர் திருடி சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பத்தனம்திட்டாவிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர்  கூறினார். இதனால் போலீசார் அவரை செல்லும்படி கூறி விட்டனர். 

கோழிக்கோட்டை விட்டு வெளியேறி, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் வழியாக சென்று கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் புகழ்பெற்ற குமரகம் சுற்றுலா இடத்தை அடைந்தபோது, அவரை குமரகம் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடமும் அவ்வாறே அவர் கூறி உள்ளார். ஆனால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார்.  போலீசார் அவரை கைது செய்து பஸ்சை பறிமுதல் செய்தனர்.  

இதற்குள் பஸ்சை காணவில்லை என அதன் டிரைவர்  குட்டியாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். குட்டியாடி போலீசார் கோட்டயம் வந்து தினூப்பை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அவரை கோர்டில் ஆஜர்படுத்தி கோழிக்கோடு சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News