செய்திகள்
மெட்ரோ ரெயில்

பொங்கல் பண்டிகை- மெட்ரோ ரெயிலில் 3 நாட்கள் பாதி கட்டண சலுகை

Published On 2020-01-12 09:07 GMT   |   Update On 2020-01-12 09:07 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயிலில் 3 நாட்கள் பாதி கட்டண சலுகை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில் பொது விடுமுறை நாள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பாதி கட்டண சலுகை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொங்கல் கலை விழா நடத்தப்பட்டன.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக பொது விடுமுறை நாட்களான வருகிற 15, 16 மற்றும் 17-ந் தேதி ஆகிய 3 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் 50 சதவீதம் கட்டண தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது மக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் (பயண அட்டை மற்றும் வரம்பற்ற பயண அட்டையை தவிர) மெட்ரோ ரெயில் பயண சீட்டுகளில் தற்போதுள்ள 50 சதவீத கட்டண தள்ளுபடியை அளித்துள்ளது.

இது 2020-ன் அரசு பொது விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும். அதன்படி வருகிற 15, 16, 17 பொங்கல் விடுமுறை நாட்களிலும் இச்சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் காணும் பொங்கல் தினமான 17-ந் தேதியன்று அரசினர் தோட்டம் மற்றும் ஏஜி டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் சென்று வர வசதியாக காலை முதல் இரவு வரை மெட்ரோ சீருந்து இணைப்பு சேவைகள் இயக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது.

Tags:    

Similar News