வழிபாடு
பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்க வரிசையில் காத்து நின்ற பக்தர்கள்.

நாளை குண்டம் விழா: பண்ணாரியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

Published On 2022-03-21 08:50 GMT   |   Update On 2022-03-21 08:50 GMT
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் விழா இந்தாண்டு நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் விழா இந்தாண்டு நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விழாவையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

பக்தர்கள் வரிசையில் வந்து குண்டம் இறங்கு வதற்காக கோவில் வளாகத்தில் தகர சீட்டுகள் மூலம் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் என பலர் மாட்டு வண்டிகளில் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த மஞ்சள் மற்றும் விவசாய பொருட்களை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். அவர்கள் கோவில் அருகே கால் நடைகளுடன் தங்கி உள்ளனர்.

விழாவையொட்டி இன்று அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

குண்டம் இறங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே பக்தர்கள் கோவிலுக்கு வந்து அங்கேயே தங்கி காத்து கொண்டு இருப்பார்கள். ஆனால் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி வழங்காததால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சேலை மற்றும் துண்டுகள் மூலம் இடம் பிடித்தனர். இதைதொடர்ந்து இன்று காலை முதல் குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாரை சாரையாக வந்து கோவிலில் குவிந்தனர். அவர்கள் குண்டம் இறங்கும் இடத்தில் உப்பு, மிளகு போட்டு வணங்கினர். அவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு குண்டம் இறங்க தகர கொட்டகையில் வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

தினமும் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல் களை நிறைவேற்றும் வகையில் கோவிலுக்கு வந்து எரி கரும்புகளை (விறகுகள்) காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு வேம்பு மற்றும் வேங்கை மரங்கள் போடப்பட்டு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி எரி கரும்புகளுக்கு (விறகு) தீ பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை அதிகாலை தாரை தப்பட்டை மற்றும் பீனாட்சி வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

முதலிலில் கோவில் பூசாரிகள் குண்டம் இறங்குகிறார்கள். பின்னர் பண்ணாரியம்மன் சப்பரமும் தொடர்ந்து பக்தர்களும் குண்டம் இறங்குகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதைதொடர்ந்து மாலை 3 மணிக்கு மேல் கால்நடைகளை கொண்டு வந்து குண்டம் இறங்க செய்வார்கள்.

பக்தர்கள் வசதிக்காக குடிநீர் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பண்ணாரி கோவில் வளாகத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது.

பண்ணாரியம்மன் கோவில் வழியாக திம்பம் மலைப்பாதையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருவார்கள். இதனால் கூட்டம் அதிகளவில் கூடும்.

எனவே விழாவையொட்டி பண்ணாரி வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி முதல் முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி வரை 24 மணி நேரம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குண்டம் விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News