செய்திகள்
193 ரன் குவித்த பகர் சமான்

பகர் சமான் போராட்டம் வீணானது - 17 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது தென்ஆப்பிரிக்கா

Published On 2021-04-04 18:40 GMT   |   Update On 2021-04-04 18:40 GMT
பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
ஜோகன்னஸ்பர்க்:

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் போட்டியில் தோற்றதால் தென்ஆப்பிரிக்கா அணி முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை ஆடியது.

அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் அரை சதமடித்தனர். டி காக் 80 ரன், கேப்டன் பவுமா 92 ரன், வான் டர் டுசன் 60 ரன், மில்லர் 50 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்தது. மில்லர் 50 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார்.



மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  பாபர் அசாம் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார்.
 
கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய பகர் சமான் 50வது ஓவரின் முதல் பந்தில் 193 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 10 சிக்சர், 18 பவுண்டரி அடித்து கடைசி வரை போராடினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 324 ரன்கள் மட்டுமே எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன்மூலம் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகியவை 1-1 என சமனிலையில் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நூர்ஜே 3 விக்கெட்டும், பெலுகுவாயோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தனி மனிதனாகப் போராடி 193 ரன்கள் குவித்த பாகிஸ்தானின் பகர் சமான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்சூரியன் மைதானத்தில் 7ம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News