செய்திகள்
கோப்புப்படம்

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2020-01-14 12:01 GMT   |   Update On 2020-01-14 12:01 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
நாகர்கோவில்:

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் வீடுகள் முன்பு பொங்கலிட்டு மகிழ்வார்கள். மாடுகளுக்கு அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.

மேலும் அதிகாலையிலேயே பெண்கள் ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவார்கள். இப்பண்டிகை நாளில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதையொட்டி நாகர்கோவிலை அடுத்த தோவாளை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக பூக்கள் குவிந்துள்ளன.

பெங்களூரு, ஊட்டி, சேலம் மற்றும் திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விதவிதமான பூக்கள் நேற்றே தோவாளை மார்க்கெட்டுக்கு வந்துள்ளன.

இப்பூக்களில் பெண்கள் பெரிதும் விரும்பி வாங்கும் மல்லி பூ அதிக அளவில் விற்பனை ஆனது. எனவே  இதன் விலையும் வழக்கத்தை விட அதிகரித்தது. இன்று ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.

இதுபோல பிச்சிப்பூ விலையும் உயர்ந்து காணப்பட்டது. இன்று ஒரு கிலோ பிச்சி பூ ரூ.1350 வரை விற்கப்பட்டது. இதுபோல  சம்பங்கி கிலோ ரூ. 300, கேந்தி பூ கிலோ ரூ. 50, செவ்வந்தி கிலோ ரூ. 150, சேலம் அரளி ரூ.250,  வாடாமல்லி ரூ. 50, கோழிப்பூ ரூ.50, ரோஜா ரூ.250, கொழுந்து ரூ.120 வரை விற்கப்பட்டது. தற்போது பூக்களுக்கு தேவை அதிகரித்து இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News