ஆன்மிகம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

பிள்ளையார்பட்டி கோவிலில் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2021-08-31 07:08 GMT   |   Update On 2021-08-31 09:12 GMT
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பக்தர்களின்றி கட்டுப்பாடுகளுடன் நடந்தது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்திற்கு அருகில் உற்சவ விநாயகரும், சண்டிகேஸ்வரரும் எழுந்தருள்வார்கள். அதன்பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெறும்.

வருகிற 10-ந் தேதி வரை நடக்கும் சதுர்த்தி திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பிரகாரத்தை வலம் வருவார்.

இந்த நிகழ்வுகளில் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.

சதுர்த்தி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம், கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News