செய்திகள்
ராகுல் காந்தி

மேற்கு வங்காளத்தையும், அதன் கலாசாரத்தையும் பா.ஜனதா அழிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2021-04-14 22:16 GMT   |   Update On 2021-04-14 22:16 GMT
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முதல் முறையாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். பிரசார கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:-

மேற்கு வங்காளத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை பா.ஜனதா அழிக்கப் பார்க்கிறது. மேலும் மாநிலத்தை பிரித்தாள விரும்புகிறது. அசாமில் இதைத்தான் அவர்கள் செய்தார்கள். தமிழகத்தில் தனது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுடன் இதைத்தான் முயன்று வருகின்றனர்.

வெறுப்பு, வன்முறை, பிரித்தாளும் அரசியல் போன்றவற்றைத் தவிர வேறு எதையும் பா.ஜனதாவால் கொடுக்க முடியாது. சோனார் பங்ளா (பொன்னான மேற்கு வங்காளம்) கோஷத்தை பா.ஜனதாவினர் முன்னெடுத்துள்ளனர். ஆனால் இது ஒரு கானல் நீர்.

சோனார் பங்ளா போன்ற கனவுகளைத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் விற்று வருகிறார்கள். ஆனால் மதங்கள், சாதிகள், மொழிகள் அடிப்படையில் மக்களை பிரிப்பதைத்தவிர வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை.

நீங்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் தோற்று விட்டார்கள். மாநில மக்கள் வேலை தேடி அலைய வேண்டும். வேலை பெற பணம் பிடிக்கும் ஒரே மாநிலம் மேற்கு வங்காளம்தான்.

நாங்கள் ஒருபோதும் பா.ஜனதாவுடனோ, ஆர்.எஸ்.எஸ்.சுடனோ கூட்டணி வைப்பதில்லை. எங்கள் போராட்டம் அரசியல் ரீதியானது மட்டுமில்லை. மாறாக சித்தாந்த ரீதியானதும் கூட. ஆனால் மம்தாஜிக்கு இது வெறும் ஒரு அரசியல் போராட்டம்தான்.

நாங்கள் அவர்களிடம் சரணடையமாட்டோம் என்பது பா.ஜனதாவுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் காங்கிரஸ் இல்லா பாரதத்துக்கு அழைப்பு விடுக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற கோஷத்தை அவர்கள் ஒருபோதும் போடுவதில்லை. ஏனெனில் அவர்கள் பா.ஜனதாவின் கூட்டணியில் ஏற்கனவே இருந்திருக்கின்றனர்.

எனவே மேற்கு வங்காளத்தை புதிய வளர்ச்சியின் சகாப்தத்தில் கொண்டு செல்ல காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Tags:    

Similar News