ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு மீண்டும் தொடக்கம்

6 மாதங்களுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் தங்க ரத புறப்பாடு மீண்டும் தொடக்கம்

Published On 2021-10-25 05:29 GMT   |   Update On 2021-10-25 05:29 GMT
கொரோனா தொற்று குறைந்ததால் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு ஆகியவற்றில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்கின்றனர்.

இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம், பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் தங்களது குழந்தைகள், நோய்நொடி இன்றி வாழ தங்க தொட்டிலில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது. இதற்கு ரூ.300 செலுத்த வேண்டும்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, பழனியில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு உள்ளிட்ட முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று குறைந்ததால் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. 6 மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட வழிபாட்டு முறைகள் தொடங்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்வதற்கான முன்பதிவும் தொடங்கியது. இதில் 31 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News