ஆன்மிகம்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2021-03-20 08:23 GMT   |   Update On 2021-03-20 08:23 GMT
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 31-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.
காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் இந்த விழா தடைபட்டது.

இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி, சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி கம்பத்தின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியை ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், சுந்தரம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா புறப்பாடு நடந்தது.

விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 23-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரப்படல்) நடைபெறவுள்ளது. 25-ந் தேதி(வியாழக்கிழமை)திருக்கல்யாண நிகழ்ச்சியும், 27-ந்தேதி(சனிக்கிழமை) தேரோட்டமும், 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அம்மையார் ஐக்கிய விழாவும், 31-ந் தேதி(புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News