சிறப்புக் கட்டுரைகள்
வீட்டு காம்பவுண்டு சுவர்

வீட்டு காம்பவுண்டு சுவர் கட்டும் விதிமுறைகள்- ஜோதிடச்சுடர் எம்.எஸ் இராமலிங்கம்

Published On 2022-01-04 12:13 GMT   |   Update On 2022-01-04 12:13 GMT
வடக்கு பார்த்த மனையில் தலைவாசலுக்கு நேராக காம்பவுண்டில் கேட் வைப்பது போல, உங்கள் மனையின், வட மேற்கிலும் நுழைவு வாயில் வைக்கலாம்.


உங்கள் மனை அல்லது வீடானது கிழக்கு நோக்கி அமைந்திருக்குமானால் அந்தக் குறிப்பிட்ட மனைக்கு காம்பவுண்டு சுவர் அமைக்கும் போதே, முதலில் தென்மேற்கில் தான் சுவர் அமைக்கும் வேலையைத் துவக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து தெற்குச் சுவர், வடக்குச் சுவர் வேலையைத் துவக்கி காம்பவுண்ட் சுவரை கட்டிமுடிக்க வேண்டும்.

கட்டி முடிக்கப்பட்ட காம்பவுண்ட் சுவரானது வடக்கு மற்றும் கிழக்குச் சுவரை விட தெற்குச் சுவர் சற்று அதிக உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். தெற்குச் சுவரை விட, மேற்குச் சுவரானது சற்று உயரமாக இருக்கும்படி அமைத்தல் நல்லது.

இந்த மாதிரிச் சுவர் அமைத்த பிறகு கிழக்குச் சுவரில், வடக்கு ஓரமாக இடத்தின் உள்ளே சென்றுவர கேட் அமைக்க வேண்டும். சில வீடுகளில் மெயின் கேட் நான் சொன்னது போல் வடகிழக்கில், கிழக்கு நோக்கி அமைத்துக் கொண்டு மனித நடமாட்டத்திற்கு எனச் சொல்லி இதே மனையில், கிழக்குச் சுவரின் தெற்கு ஓரத்தில் சின்ன அளவில் ஒரு கேட் அமைத்துக் கொள்வார்கள். இது வாஸ்துவின் அடிப்படையில் மிகப்பெரிய தோ‌ஷத்தை உண்டாக்கும்.

குடும்பத்தில் எதிர்பாராத வழக்குகள், கணவன், மனைவியிடையே பிரிவுகள் என குடும்ப அமைதி கெட்டுப் போகும். அந்தக் குடும்பத்தில் வளரும் இளம் பெண் பிள்ளைகள் வாழ்வு பாதிக்கப்படும். சுபகாரியங்கள் தடைபடும்.

மனை மட்டுமில்லாமல், இப்படிக் கிழக்கு நோக்கி வீடுகட்டி, தலைவாசலை கிழக்கு நோக்கி, வடக்கு ஓரத்தில் வைத்து அழகாகக் கட்டிவிட்டு, தென்கிழக்கில் உள்ள சமையல் அறையில் இருந்து கிழக்கு நோக்கி வீட்டுக்கு வெளியே செல்ல சின்ன வாசல் வைத்திருப்பார்கள். இதுவும் வாஸ்துவின் அடிப்படையில் தவறுதான். இதைவிட சமையல் அறையில் இருந்து வெளியே வந்து செல்ல, வீட்டின் தெற்குச் சுவரில், தெற்கு நோக்கி வாசல் வைப்பது நல்லது செய்யும்.

வடகிழக்கு என்பது குடும்பத் தலைவனுக்கு என்றால், தென்கிழக்குக், குடும்பத்தலைவிக்குண்டான இடமாகும். இதனால் தான் சமையல் அறை தென்கிழக்கு மூலையில் தரப்பட்டது. ஆண்கள் சமையல் செய்யும் நிலை உண்டாகுமெனில், அந்தவீட்டில் சமையல் அறைவடமேற்கில் அமைந்திருந்தால், அது ஆண்களுக்கும் நன்மைதரும். அங்கு சமைக்கும் பெண்களுக்கும் நன்மைதரும்.

உங்கள் மனையானது கிழக்கு நோக்கி இருக்குமானால், காம்பவுண்ட் சுவர் கட்டும்போது, கிழக்குச்சுவரில், வடக்கு ஓரத்தில்தான் உள்ளே, வெளியே செல்ல கேட் வைக்கவேண்டும்.

இப்படி அமைகின்ற வீடுகளில் குறை இல்லா வாழ்வும், நிம்மதியும், கொண்டாட்டங்களும் தொடரும், குறிப்பாக இளம் வாரிசுகள் சீரும் சிறப்புமாக வாழுவதைக் காணலாம்.


இப்படிக் கிழக்குச்சுவரில் கேட் வைக்கும்போது, வடக்கு முதல் தெற்கு வரை உள்ள கிழக்குச் சுவரை மொத்த நீளத்தில் பாதியாக்கி, இப்படி பாதியாக உள்ள வடக்குப் பக்க பாகத்தை, மீண்டும் பாதியாக்கி, அந்தப் பாதி அளவு எங்கு துவங்குகிறதோ, அங்கிருந்து உங்களுக்குத் தேவையான அளவு கேட் வைத்துக் கொள்ளலாம்.

இதுபோல ஒரு வேளை தெற்குபார்த்த மனை உங்களது எனில், கேட் வைக்கும் போது, தெற்குச் சுவரில், கிழக்கு ஓரத்தில் தெற்கு நோக்கி கேட் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை சார்ந்த மனை நன்மை தரும். அந்த அடிப்படையில் குறிப்பாக ரி‌ஷப ராசி, கன்னி ராசி, மகரம் ராசியில் பிறந்துள்ள, இவர்களுக்கு எப்போதும் தெற்கு பார்த்த மனை அதிக சுபிட்சம் தரும்.

தெற்கு பார்த்த மனைகளிலே, பெரிய பங்களாக்களை கட்டி குடியிருப்போர் ஏராளம். எனவே, சென்டிமென்டாகத் தெற்கு என்று பயம் கொள்ளவேண்டாம்.

இந்தத் தெற்குபார்த்த மனையில் கட்டும் வீட்டுக்குக்கூட, தெற்குச்சுவரின், கிழக்கு ஓரத்தில்தான் தலைவாசல் வைக்க வேண்டும்.

சில வீடுகளில் தெற்கு பார்த்த மனைகளில் தெற்கு சுவரில், கிழக்கு ஓரத்தில் உள்ளே நுழைய கேட் வைத்து, அதே தெற்குச் சுவரில் தென்மேற்கில் வாகனம் செல்லத்தகுதியான அளவு பெரிய கேட் வைத்திருப்பார்கள்.இது வாஸ்துவின் படி மிகத்தவறு. குறிப்பாக இந்த அமைப்பு அங்கு பிறக்கும் பிள்ளைகள் எல்லா விதத்திலும் மவுசு குறைந்த வாழ்வையே சந்திப்பார்கள்.

ஆகவே, தென் மேற்கில் வீட்டில் கூட ஜன்னல் வைப்பதில்லை என்ற விதி உள்ளபோது, அதே தென் மேற்கில் மனையை திறந்து வைப்பது, பெறும் கேடான வாஸ்து தோசத்தை உண்டாக்குகிறது.

தென்கிழக்கும், தென்மேற்கும் பெண்களுக்கான பகுதி என்பதால், இந்தத் தெற்குபார்த்த மனையைப் பயன்படுத்தும்போது, மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த வீடுகளில் குறிப்பாக பெண்களுக்கு அனேகத் தொல்லைகள் உண்டாகும்.

இப்படித் தெற்குத் திசை மனையைவாங்கி அதில் கேட் வைக்கும்போது, தெற்குச்சுவரின் கிழக்கு முதல் மேற்கு வரை உள்ள மொத்த பக்கம் பாதியை மீண்டும் இரண்டாகப் பிரித்து, பிரித்த பாகத்தின் கிழக்கில் கேட் வைக்கவேண்டும்.

தென் மேற்கும், வடகிழக்கும் இரு முக்கியமான பாகங்கள் என்றாலும், வடகிழக்கு திறந்து வைப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் அனுமதிக்கிறது.ஆனால் தென்மேற்கு பாகத்தை திறந்து வைக்கமுடியாது. அதேபோல தெற்கு பார்த்த மனையில், வடக்கு எல்லை முதல் தெற்கு எல்லை வரை, தென்திசையில் இடம் விட்டுவிடாமல் கட்டிடம் கட்ட வேண்டும்.

இதுபோல மேற்கு பார்த்த மனையில் கேட் அல்லது நுழைவு வாயில் அமைக்கும் போது மேற்குச் சுவரில், வடக்கு ஓரமாக மனையின் உள்ளே செல்ல கேட் அமைத்துக் கொள்ளவேண்டும்.

சிலருக்கு மேற்கு பார்த்த மனை என்றாலே பயம் வருகிறது. காரணம் சரியாகத் தெரியாமல், சூரியன் அஸ்தமனம் ஆகும் திசை ஆயிற்றே என்று யோசிப்பதுண்டு. இது ஒருவகையான சென்டிமென்ட் பயமே தவிர வேறில்லை. குறிப்பாக மிதுனம் ராசி, துலாம் ராசி, கும்பம் ராசி கொண்டு பிறந்தவர்களுக்கு மேற்கு பார்த்த மனையே மிகப் பெரிய அதிர்ஷ்டத்தைத்தரும்.

மேற்கு பார்த்த மனை கொண்டவர்கள், எக்காரணம் கொண்டும், மனையின் தென்மேற்கில் வாசல் வைப்பது மிக மோசமான விளைவுகளைத் தரும்.

குறிப்பாக இந்த மேற்கு பார்த்த மனையில் காம்பவுண்ட் சுவர் கட்டும் போது மற்ற மூன்று திசையில் உள்ள காம்பவுண்ட் சுவரைவிட மேற்கு காம்பவுண்டு சுவரை சற்று உயரமாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.

ஒரு மனையில் உள்ள நான்கு மூலைகளில் தென்மேற்கு தான் மிக முக்கியமானது. தென்மேற்கு மூலைதான் வீட்டில் பணம் வைத்துப் புழங்குவதற்கும், தெய்வ இறை அருள் பெறுவதற்கும் ஏற்ற இடம்.

வட மேற்கில், மேற்குச் சுவரில் மேற்கு நோக்கி, வடக்கு ஓரத்தில் வைக்கும் கேட்டானது முடிந்த மட்டும் பிரமாண்டமாய் அமைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம்.

சிலர் உள்ளே நுழைய வடமேற்கில், மேற்கு நோக்கி சிறிய நுழைவு வாயிலும், தென்மேற்கில் வாகனம் நிறுத்துவதற்காக, மேற்கு நோக்கி, தெற்கு ஓரத்தில் பெரிய நுழைவுவாயில், கேட் வைத்திருப்பார்கள்.

இந்த தென்மேற்கில் வைத்துள்ள இந்த நுழைவு வாயில் மொத்த குடும்ப நபர்களையும் பாதித்து குடும்பம் சிதிலமடையும்.

இதேபோல நினைத்தபடி ஒரு மனையில் வீட்டைக் கட்ட வேண்டுமெனில் அது குறிப்பாக வடக்கு பார்த்த மனையில் சாத்தியம்.

குறிப்பாக வடக்கு பார்த்த மனை என்பது, கடகம் ராசி, விருச்சிகம் ராசி, மீனம் ராசி அன்பர்களுக்கு மிக பிரமாதமாக அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கும்.

மேற்கண்ட ராசிக்காரர்கள் இப்படி வடக்கு பார்த்த மனை வாங்கி அதில் சில தவறுகள் செய்து, அதாவது வாஸ்துவின் விதிகளுக்கு முரண்பாடாக வீடு கட்டியிருந்தாலும் அந்தக் குடும்பம் பெரிய பாதகங்களை சந்திக்கவில்லை.

எனவே இப்படி வடக்கு பார்த்த மனை உள்ளவர்கள், உங்கள் மனையின் வடகிழக்கில், கிழக்கு ஓரமாக வடக்கு நோக்கி நுழைவு வாயில் கேட் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கேட்டானது காம்பவுண்ட் சுவரின் உயரத்தைவிட சற்று குறைவான உயரம் உள்ள மாதிரி வைத்துக் கொள்ளவேண்டும். இதுபோல இந்த மனைக்குச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டும்போது கூட மற்ற நான்கு சுவர்களைவிட, வடக்குப்பக்கம் காம்பவுண்டு சுவரானது சற்று உயரம் குறைந்திருக்க வேண்டும்.

இப்படி காம்பவுண்ட் சுவரில் அமைக்கும் நுழைவு வாயிலுக்கு நேராகவே, வீட்டின் தலைவாசலும் அமைவது சிறப்பு.

இதேபோல, வடக்கு பார்த்த மனையில் தலைவாசலுக்கு நேராக காம்பவுண்டில் கேட் வைப்பது போல, உங்கள் மனையின், வட மேற்கிலும் நுழைவு வாயில் வைக்கலாம். வடமேற்கில், வடக்குச் சுவரில் மேற்கு ஓரத்தில் வடக்கு நோக்கியும் கேட் வைக்கலாம். வாகனங்கள் வந்து செல்லும்படியாக கேட் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி வடகிழக்கிலும், வடமேற்கிலும் இரண்டு நுழைவு வாயில் வைத்துக் கட்டிய வீட்டில் ஆண்களுக்கு வருமானம், தைரிய வீரிய பராக்ரமம், அங்கு பிறக்கும் ஆண் பிள்ளைகள் கூட மிக அருமையான வீரதீர செயல்களோடு, மொத்தத்தில் இப்படியான வீடுகளில் தைரியலட்சும மகாலட்சுமி வாசம் செய்வார்.

இப்படி வடக்கு பார்த்த மனைகளில் நுழைவு கேட் அமைக்கும்போது, வடக்குப் பாகத்தின் கிழக்கு 25 சதவீத இடத்திலும் மேற்கு பாகத்தில் மேற்கிலிருந்து 25 சதவீத இடத்திலும் நுழைவு கேட் வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக இந்த மனையில் வீடுகட்ட முயலும் போது, முதலில் தென் திசையில் உள்ள எல்லையிலும், மேற்கு திசையில் உள்ள எல்லையிலும் முதல் காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொண்டு, இந்த வடக்கு பார்த்த மனையில் வீட்டைக் கட்டினால் தங்கு தடையின்றி கட்டிட வேலைகளும் ஆபத்து ஏதும் நிகழாமல், தொழிலாளர்கள் வேலை செய்வது என நிச்சயமாக ஒரு அருமையான வீட்டைக் கட்டிக் கொண்டு குடியேறலாம்.

Tags:    

Similar News