செய்திகள்
மரணம்

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய ஐ.டி. ஊழியர் மர்ம காய்ச்சலுக்கு பலி

Published On 2021-02-23 07:01 GMT   |   Update On 2021-02-23 07:01 GMT
கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று திரும்பிய ஐ.டி. ஊழியர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் எழில்அரசன் (வயது 30). இவர் அங்குள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த எழில் அரசனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய எழில்அரசன் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சேர்வாக காணப்பட்டார். இதனையடுத்து அவரை அவரது மனைவி சிகிச்சைக்காக தனது சொந்த ஊரான கோவைக்கு அழைத்து வந்தார். பின்னர் அவரை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது எழில் அரசனுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று திடீரென அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து தனது கணவரை வினோதினி வேறொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே எழில் அரசன் வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News