செய்திகள்
கோப்புபடம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடியில் ரூ.13 கோடி பறிமுதல்

Published On 2020-09-14 10:02 GMT   |   Update On 2020-09-14 10:02 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 43 ஆயிரம் போலி விவசாயிகளிடம் இருந்து வங்கி கணக்கின் மூலம் ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி:

பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக அவரவர் வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோர் பயன்பெற்று உள்ளதாகவும், இதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக புகார் எழுந்தனர்.

இது பற்றி விசாரணை நடத்த அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணா மூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குராலா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 வேளாண் உதவி இயக்குனர்கள், தற்கால பணியாளர்கள் 18 பேர் என 20 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக 7 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் 2 லட்சம் போலி விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.

இதில் முதற்கட்டமாக 43 ஆயிரம் போலி விவசாயிகளிடம் இருந்து வங்கி கணக்கின் மூலம் ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அனைத்தும் அரசின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது.

மேலும் இந்த மோசடிக்கு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News