ஆன்மிகம்
தீபாவளி பண்டிகை

தீபாவளி திருநாளின் அடிப்படை தத்துவம்

Published On 2020-11-13 08:58 GMT   |   Update On 2020-11-13 08:58 GMT
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தில், எத்தகைய நிலையில் தர்மம் வெற்றி பெறுகிறது என்பதே தீபாவளி பண்டிகை கூறுகிறது.
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தில், எத்தகைய நிலையில் தர்மம் வெற்றி பெறுகிறது என்பதே தீபாவளி பண்டிகை கூறுகிறது. எங்கெல்லாம், அநீதி அதிகமாகி, தர்மவாழ்வு சிதைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் தோன்றி அதர்மம் செய்பவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றுவார் என்பதன் எடுத்துக்காட்டாக விளங்குகிறது தீபாவளி பண்டிகை. இந்துகள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த பண்டிகை ஓர் உன்னதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பண்டிகை நாள் அன்று தீப ஒளி ஏற்றி வைப்பதன் மூலம் இருள் அகலுகிறது. கோவிலில் மட்டுமல்ல, வீடுகளிலும் தீபங்களை ஏற்றி ஒளி வீச செய்து, பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் துன்ப இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்பது ஐதீகம்.

துன்பம், அச்சம் என்பன இருளின் இயல்பு, இன்பம், தெளிவு என்பன ஒளியின் சிறப்பு. ஒருவர் இன்பமும் தெளிவும் பெறவேண்டுமானால் துன்பமும் அச்சமும் அகல வேண்டும். இருள் அகல தீபம் துணை நிற்கும். தெளிவு பிறக்க பக்தி வழிகாட்டும். எனவேதான் தீபங்கள் ஏற்றிவைத்து தீபாவளியை பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.

அதே போல அசுரக் குணங்கள் தேய்ந்து விலகிய நாள், அறியாமை என்ற இருள் அகன்ற நாள், புனிதநாள், அறிவொளி பரந்த நாள், அகந்தை ஒழிந்த நாள், அருளும், கருணையும் மறுமலர்ச்சி பெற்ற நாள், அமைதி பிறந்த நாள், தீயனவெல்லாம் தொலைந்த பெருநாள் என்றெல்லாம் சிறப்புப் பெறுகிறது தீபாவளி திருநாள்.

தீபாவளி அன்று அதிகாலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. தொடர்ந்து நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வதுடன், இனிப்புப் பலகாரங்கள் வழங்கி விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வதும் ஒரு பாரம்பரிய வழக்கமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலும் பட்டாசு வெடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகை வெவ்வேறு விதமாகவே கொண்டாடப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார் பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பாரம்பரிய பண்பாட்டு மரபுகளுக்கு ஏற்ற வகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோலவே, இலங்கையிலும் அந்தந்தப் பிரதேச பண்பாடு, கலாசாரத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்படி கொண்டாடினாலும் பொதுவாக உறவுகளை நேசித்து அன்பை பெருக்குவதே தீபாவளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும்.
Tags:    

Similar News