செய்திகள்
அடுக்கு மாடி லிப்டு வாஸ்து

வீடும் வாழ்வும்: அடுக்கு மாடி குடியிருப்பின் ‘லிப்டு’ வாஸ்து- ஜோதிடச்சுடர் எம்.எஸ். இராமலிங்கம்

Published On 2021-10-26 12:46 GMT   |   Update On 2021-10-26 12:46 GMT
அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்க நினைப்பவர்கள் இதையாவது மனதில் பதிய வைத்து வீட்டை வாங்க முயற்சி செய்யலாம். தனி வீடு கட்டி குடியேற நினைப்பவர்களும் இந்த விதியைப் பின்பற்றலாம்.


கடந்த வாரக் கட்டுரையில் தலைவாசலுக்கு ஏன் பூஜை செய்கிறார்கள் என்ற விளக்கம் கண்டோம். இங்கே ஒரு பில்டிங் கட்டும் போது லிப்ட் எங்கு எப்படி அமைய வேண்டும் என்ற அனேகச் செய்திகளைப் பார்ப்போம்.

பொதுவாகக் கட்டிடத்தின் தெற்குப் பகுதி உயர்ந்து இருக்க வேண்டும் என்றாலும், அதற்காக லிப்ட் எனும் நிரந்தரமாக இயங்கும் இயந்திரத்தை கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் வைப்பது தீமை தருவதாய் அமையும்.

இதே போல கட்டிடத்தின் கிழக்குப் பாகத்திலும் லிப்ட் இயந்திரத்தைப் பொருத்தக் கூடாது.

இந்திர பாகமாகக் கருதப்படுகிற கிழக்கில் லிப்ட் அமைப்பது குடும்பத்தில் அன்பான வாழ்வுச்சிதைந்து போவதும், சில சமயங்களில் பொருளாதாரச் சேதங்கள் உண்டாகிச் சொத்துகள் பறிபோவதும் குடும்பப் பிரிவினைகள் உண்டாவதும் தோன்றி சிக்கலாகி விடும்.

வீட்டுக்குள்ளே கிழக்கில் தரையில் பள்ளம் உண்டாக்குவதும், அதற்கு நேர் மேல் மொட்டை மாடியில் தளத்தைவிட உயர்வாக அறை அமைப்பதும் பெரிய வாஸ்து தோ‌ஷத்தை உண்டாக்கிவிடும்.

இதுபோலவே, வீட்டின் உள்ளே வடகிழக்குப் பகுதியில் மின்தூக்கி அமைப்பதும் தீமை தருவதாகவே அமையும்.

இதன் காரணமாக வீட்டின் நாளைய வாரிசுகள் விருத்தியிழந்து பொறுப்பற்ற பிள்ளைகளாகி குடும்ப கெளரவம், நிம்மதி பறிபோகும் நிலை உண்டாகும்.

குறிப்பாக வடக்கு பார்த்த வீட்டுக்கு வீட்டின் இடது பக்கத்திலும், கிழக்கு பார்த்த வீட்டுக்கு வீட்டின் வலது பக்கத்திலும், தெற்கு பார்த்த வீட்டுக்கு வீட்டின் இடது புறத்திலும், மேற்கு பார்த்த வீட்டுக்கு வீட்டின் இடப்பக்கத்திலும் மின் தூக்கி அமைவது நன்மை.

மேலும், இன்றைய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அல்லது இப்படியான இடங்களில் வீடு வாங்க நினைப்பவர்கள் கீழே சொல்லும் செய்திகளை கவனிக்கலாம்.

அதாவது, பொதுவாகவே உங்கள் குடியிருப்புகளில் மின் தூக்கி அமைந்த இடத்திற்கு தெற்குப் பக்கத்திலும் மேற்குப் பக்கத்திலும் வசிப்பவர்கள் தீய பலன் இன்றி எப்போதும் செழிப்பாக வசதியாக வாழும் நிலை உண்டாகும்.

மாறாக வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்குப் பக்கத்தில் வசிப்பவர்கள் அநேகமான பிரச்சினைகளோடு வாழும் நிலையுண்டாகும்.

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்க நினைப்பவர்கள் இதையாவது மனதில் பதிய வைத்து வீட்டை வாங்க முயற்சி செய்யலாம்.

தனி வீடு கட்டி குடியேற நினைப்பவர்களும் இந்த விதியைப் பின்பற்றலாம்.

அதாவது வடக்கு நோக்கி வீடு கட்டும் நோக்கம் கொண்டவர்கள், உங்கள் வீட்டில் வடமேற்கு மூலையில் மின் தூக்கி அமைத்து கொண்டால் கண்டிப்பாக வீட்டின் உள்ளே வடகிழக்கு மூலையில் படிக்கும் அறையோ, நூல்கள் வைக்கும் அறையோ, வயதானவர்கள் தூங்கும் அறையோ, அமைப்பது கூடவே கூடாது.

வடகிழக்கு ஒரே ஹால் ஆக இருப்பது தீய பலன்கள் செய்யாது.


வடமேற்கு மூலையில் அமைந்துள்ள மின் தூக்கிக்கு பின்புறமான மேற்கு, தென் மேற்கு போன்ற இடங்கள் படுக்கை அறையை அமைத்துக் கொள்ளலாம். சமையல் அறையை வழக்கம் போல் தென்கிழக்கில் அமைத்துக் கொள்ளலாம். தென் மேற்கில் சிறப்பாக பூஜை அறை அமைத்துக் கொள்ளலாம். இந்த அமைப்பு மிகச் சிறப்பு. கிழக்கு, மேற்கு, தெற்கு நோக்கி வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இதே விதி பொருந்தும்.

வடமேற்கு என்பது எல்லா விதமான நல்லது, கெட்டதுகளைத் தாங்கி நிற்கிற இடம். எனவே, வாஸ்துவின் படி மின்தூக்கி அமைக்க சிறந்த இடமாக வீட்டின் வடமேற்கு மூலையை பயன்படுத்துவது சிறப்பு.

வேறு வழியின்றி இடமில்லாக் காரணம் கொண்டு வீட்டின் சரி மேற்கில் மின்தூக்கி அமைத்தீர்களாயின் அந்த மின் தூக்கி இருக்கும் இடத்திற்கு வடக்குப் பக்கத்தில் படுக்கை அறை அமைக்கக் கூடாது.

வேண்டுமெனில் மின் தூக்கியின் வடக்குப் பக்கத்தில் படிக்கட்டுகளை, அதாவது வீட்டின் வட மேற்கு மூலையில் அமைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் படிக்கட்டுகளுக்குப் பதிலாக குளியலறை மற்றும் வாஷிங்மெசின் வைப்பதற்கான அறை, வேண்டாத பொருட்களை வைக்கும் ஸ்டோர் என அமைக்கலாம்.

இதுவே ஓர் அலுவலகமாகவோ, வியாபார நிறுவனமாகவோ இருந்தால் அந்த இடத்தில் அந்த அலுவலகத்தின் கடை நிலை ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்யும் இடமாக அமைத்துக் கொள்ளலாம்.

வேறு வழியின்றி கட்டிடத்தின் தென்மேற்கில் லிப்ட் அமைப்பீர்களானால் என்னதான் வீட்டை மற்ற காரணங்களால் வாஸ்துபடி சரியாகக் கட்டினாலும் இந்த வீடு பாழாப் போகும் என்பது விதி.ஆனால், அன்றாடம், மக்களுக்குப் பயன்படும் பொருட்களை விற்கும் வியாபார நிறுவனம் இப்படி தென் மேற்கில் லிப்ட் வைப்பதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.

கட்டாயமாக வீட்டில் தென் மேற்கில் லிப்ட் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுவே, அக்னி மூலை எனும் தென்கிழக்கு மூலையில் மின்தூக்கி வைத்து வீட்டைக் கட்டினால் அந்த வீட்டின் தெற்குப் பக்கம் முழுவதும், பூஜை அறை, படுக்கை அறை என அமைத்து வடக்குப் பக்கத்தில் ஹால் அமைப்பது பரவாயில்லை என்றாலும் தென் கிழக்கில் லிப்ட் அமைப்பதைத் தவிர்க்கலாம்.

குறிப்பாக, கிழக்கு நோக்கி இரண்டு பிளாக்காக இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டி, அதில் மேற்கில் மையப் பகுதியில் லிப்ட் அமைக்கும் பட்சத்தில் அந்த இரண்டு பிளாக்குகளில் குறிப்பாக வட பகுதிகளில் வசிப்போர் துன்பப்படுவதாயும் அதே கட்டிடத்தின் லிப்ட்டுக்கு வலது புறம் உள்ள தென் பகுதி சார்ந்தவர்கள் மிகச் சிறப்பாக வாழுவதாயும் அமையும்.

வீடு கட்டி விற்கும் கம்பெனிகள் இவற்றை எல்லாம் கவனித்தால் உங்களிடம் வீடு வாங்கிக் குடியிருப்போர் சிறப்பாக வாழுவதுடன் உங்களுக்கும் பெயர் கிடைக்கும்.

கிழக்கு நோக்கி வீடு கட்டும் நீங்கள் உங்கள் வீட்டில் லிப்ட் அமைக்கச் சிறந்த இடம் நேர் வடக்குப் பகுதி மிகச் சிறந்த இடமாகும். ஆனால், அதன் அருகில் வரும் வடகிழக்கில் வீட்டுக்கு உள்ளேயும் சரி வீட்டுக்கு வெளியேயும் சரி, படிக்கட்டுகள் அமைக்கக் கூடாது.

பொதுவாகவே வடகிழக்குப் படிக்கட்டுகள் வாஸ்துபடி சிறப்பில்லை. சிலர் பெரிய பங்களா போல வீட்டைக் கட்டி அந்த வீட்டின் மையப் பகுதியில் மின் தூக்கி அமைத்துக் கொள்வதுண்டு. இது வீட்டின் தென் பகுதி எனும் பாதி மட்டுமே வாஸ்துவின் படி சரியாகவும், மீதியுள்ள லிப்டுக்கு வடபகுதி சுபிட்சமற்ற இடமாகவும் அமைந்துவிடும்.

இந்த வீட்டின் பாதிக்கு வடபகுதியில் படுக்கை அறை அமையுமானால் அந்த அறைகளில் தூங்குபவர்களுக்கு உடல் வியாதி, மனக்கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவதுண்டு.

மேலும், குறிப்பாக வடபகுதியில் ஒருவேளை பணப்பெட்டி வைக்கும் இடம் இருப்பின் அந்த வீட்டில் வசிப்பவர் பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் நிச்சயம் பொருளாதார வீழ்ச்சி உண்டாகி கஷ்டங்கள் வந்துவிடும்.

காரணம் வீட்டில் உயர்வான இடம் தெற்காகவும் பள்ளம் வருவதனால் வடக்காகவும் இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் லிப்ட் இருக்கும் இடத்தின் தென்பகுதி விருத்தியாகவும் வடபகுதி தேய்ந்தும் போகும்.

அப்படியானால், வீட்டின் வடகிழக்குப் பகுதி பள்ளமாக இருக்கலாம்தானே எனக் கேட்கத் தோன்றும். ஒரு வீட்டின் உள்ளே வடகிழக்கு சற்றே தாழ்வாக இருக்கலாமே தவிர, 4 அடி அல்லது ஐந்து அடி பள்ளம் வருவது சிறப்பு அல்ல.

மேலும், வடகிழக்கில் பாராமான இயந்திரம் போன்ற சாதனங்களை மொட்டை மாடியில் உயரமாக மெஷின் ரூம் கட்டி அதில் நிரந்தரமாக அமர வைப்பது, வாஸ்துவின்படி பெரிய கோளாறுகளைக் காட்டிவிடும்.

மொட்டை மாடியில் குறிப்பாக வடகிழக்கு உயரமாக இருக்கக்கூடாது என்பதால் வடகிழக்கில் மின்தூக்கி வைத்து வீடு கட்டுவது எப்படிப்பார்த்தாலும் தீயவினைகனைத்தான் தரும்.

மேலும் ஒரு குடும்பம் என்பது அவர்களின் பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்து அமைகிற காரணத்தால் வீட்டின் வடகிழக்கு மூலையானது பாரமில்லாத நிலையில் அமைய வேண்டும் என்பதால் வீட்டில் வடகிழக்கில் லிப்ட் அமையக்கூடாது.

குறிப்பாக ஒரு வீடாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் வடமேற்கில் மின் தூக்கியை அமைத்து அந்த மின் தூக்கிக்கு அருகில் மேற்குச் சுவரில் தெற்கு நோக்கி ஏறும்படி படிக்கட்டுகள் அமைத்தால் மிக கச்சிதமாக இருக்கும். அல்லது மின் தூக்கிக்கு, இடது, வலது மற்றும் பின்புறமாக படிக்கட்டுகள் அமைத்தும் மேல் மாடிக்குச் செல்ல பயன்படுத்தலாம்.

எக்காரணம் கொண்டும் இப்படி வடமேற்கு மூலையில் மின் தூக்கி அமைக்கும் போது வடக்குச்சுவற்றில் மேற்கு நோக்கி ஏறும்படி படிக்கட்டுகள் அமைக்கக்கூடாது.

இதேபோல் தென்மேற்கு மூலையில் கிழக்கு மேற்காக அல்லது வடக்கு தெற்காக படிக்கட்டுகள் அமைத்து மின் தூக்கியை நேர் மேற்குத்திசையில் கட்டிடத்தின் ஒரத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

தனி வீடானாலும் சரி, வியாபாரஸ்தானமானாலும் சரி, மின் தூக்கியின் 4 சுவர்கள் பூஜை அறையைக் தொட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. இதேபோல படுக்கை அறையைத் தொட்டுக்கொண்டு இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

நமது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கு நேயர்கள் கேட்கும் கேள்வி என்னவெனில், இந்த வாஸ்து விதிகளில் குறை இருந்தால் அந்தக் குறைகள் அந்த கட்டிடத்தின் உரிமையாளரை பாதிக்குமா அல்லது அதில் வாடகைக்குக் குடியிருப்பவர்களையும் பாதிக்குமா? என்பதே.

அதாவது நேற்று நீங்கள் பூக்கடை வழியாகச் சென்று விட்டு இன்று கருவாட்டுக் கடை வழியாகச் சென்றால் என்ன நிகலுமோ அப்படித்தான்.

நீங்கள் இருக்கும் இடத்தின் அம்சமே உங்களை வந்து சேரும். எனவே நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் அந்த வீட்டில் உள்ள வாஸ்துக் குறைபாடுகள் உங்களையே பாதிக்கும் என்பதே உண்மை. சிலர் வாடகைக்குச் செல்லும் போது தென்மேற்கு மூலையில் சமையல் அறை அமைந்து விடுகிறது.

இது அந்த வீட்டின் உரிமையாளருக்கும் வீட்டில் குடிவந்தவருக்கும் அனேக விரோதமான போக்குகள் ஏற்பட்டு இருவரும் காலப்போக்கில் விரோதிகளாகவே மாறி விடுகிறார்கள்.இந்த நிலை இருவருக்கும் கேடான ஒரு அம்சத்தைக் கொடுத்து நிம்மதியைக் கெடுக்கிறது.

சில இடங்களில் தென்மேற்கில் கழிவறை அமைந்து விடுகிறது. இது குறிப்பாக அங்கே குடியிருப்பவர்களுக்கு பொதுவாக பெண்களுக்கு உடல் சார்ந்த உபத்திரங்கள் உண்டாகி பெரும் சிக்கலைத் தருகிறது.

வடகிழக்கில் சமையல் அறை அமைந்து அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகி, வாடகையே தரமுடியாத அளவுக்கு சென்று வீடு கொடுத்தவருக்கும் குடிவந்தவருக்கும் மனஸ்தாபம் உண்டாகி விடுகிறது.

எனவே அது சொந்த வீடாக இருந்தாலும் சரி, வாடகை வீடாக இருந்தாலும் சரி, கட்டாயம் வாஸ்துக் குறைபாடுகள் இருப்பின் அது உரிமையாளரை மட்டுமின்றி அங்கும் வாழும் குடும்பத்தாரையும் பாதிக்கவே செய்யும் என்பதில் ஐயமில்லை.

இதனைத் தொடர்ந்து கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருக்கலாமா?

கோவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் குடியிருக்கலாமா?

சிவன் சொத்து குலநாசம் என்பார்களே இதில் உண்மையுண்டா?

இதுபோன்ற அனேகச் செய்திகளைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்புக்கு: msramalingamastrologer@gmail.com

Tags:    

Similar News