செய்திகள்
பெற்றோருடன் பி.வி.சிந்து.

வெண்கலம் வென்று சாதனை: அடுத்த ஒலிம்பிக்கிலும் சிந்து விளையாடுவார் - தந்தை ரமணா

Published On 2021-08-02 03:28 GMT   |   Update On 2021-08-02 03:28 GMT
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை பெற்ற சிந்து இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை சென் யூ பேவும் (சீனா), வெள்ளிப்பதக்கத்தை தாய் சு யிங்கும் (சீன தைபே), வெண்கலப்பதக்கத்தை பி.வி.சிந்துவும் (இந்தியா) வென்றனர்.

அரைஇறுதியில் நேற்று முன்தினம் தாய் சு யிங்கிடம் தோல்வி அடைந்த சிந்து நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 21-13, 21-15 என்ற நேர் செட்டில் சீனாவின் இடக்கை வீராங்கனையான ஹி பிங் ஜியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிவரை முன்னேறி வெள்ளிப்பதக்கத்தை பெற்ற சிந்து இந்த முறை வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

வெற்றிக்கு பிறகு 26 வயதான சிந்து கூறுகையில், ‘இந்த ஆட்டம் எனக்கு உணர்வுபூர்வமாக அமைந்தது. உணர்ச்சிப்பெருக்குடன் விளையாடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். நாட்டுக்காக பதக்கம் வென்றதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

சிந்துவின் குடும்பம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கிறது. அவரது தந்தை பி.வி.ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். அர்ஜூனா விருது பெற்றவர். தாயார் பி.விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான். விஜயா, விஜயவாடாவில் பிறந்தாலும் சில ஆண்டுகள் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகரில் வசித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்த விஜயா தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக விளையாடி இருக்கிறார்.

தனது 8½ வயதில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கிய சிந்து ஐதராபாத்தில் கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். அங்கு கோபிசந்தின் பயிற்சியின் கீழ் பட்டை தீட்டப்பட்ட சிந்து தேசிய போட்டிகள், சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்தார். உலக சாம்பியன்ஷிப்பில் 5 பதக்கமும் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) ஒலிம்பிக்கில் 2 பதக்கமும் வென்று இந்திய பேட்மிண்டனை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

சிந்துவின் தந்தை ரமணா கூறுகையில், ‘சிந்துவின் பயிற்சியாளர் பார்க் டா சாங்குக்கு (தென்கொரியா) நன்றி சொல்ல விரும்புகிறேன். இதே போல் சிந்துவுக்கு ஆதரவாக இருந்த மத்திய அரசு, பேட்மிண்டன் சம்மேளனம், ஊடகத்தினருக்கும் நன்றி. தேசத்துக்காக சிந்து பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்பது பெருமையாக இருக்கிறது.

சிந்து அரைஇறுதியில் தோல்வி அடைந்ததும் வேதனையில் கண் கலங்கினார். அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறினேன். மனம் தளரக்கூடாது. அடுத்த போட்டியில் எனக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவின் ஆட்ட நுணுக்கங்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்தேன். அத்துடன் அவரது ஆட்ட வீடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்தேன்.

சிந்து 3-ந்தேதி (நாளை) டெல்லி திரும்புகிறார். அவரை வரவேற்க நான் டெல்லி செல்ல உள்ளேன். அடுத்த ஒலிம்பிக்கிலும் சிந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்து உற்சாகமாக விளையாடி வருகிறார்’ என்றார்.

Tags:    

Similar News