செய்திகள்
கேஎஸ் அழகிரி

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை- கே.எஸ்.அழகிரி கோரிக்கை

Published On 2021-06-08 05:20 GMT   |   Update On 2021-06-08 05:20 GMT
நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப் போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக எடுக்க வேண்டும்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதைத் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நீட் தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படிக்கிற பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற அநீதி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த புள்ளி விவரத்தின்படி கடந்த 15 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் கடும் சோதனைகளை சந்தித்து வந்துள்ளனர்.

2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்த 700 மாணவர்களுக்கு நீட் மூலமாக தேர்வு பெற்று இருந்தாலும், இதில் 9 மாணவர்களுக்குத் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நீட் தேர்வின் காரணமாக அநீதி அதிகரித்ததே தவிர குறையவில்லை.



இந்த அநீதியைப் போக்குவதற்குத் தான் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர 313 மாணவர்களுக்கும், பல் மருத்துவ படிப்பிற்கு 92 மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, அரசுப் பள்ளியில் படித்த 405 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மீதமுள்ள 3,000 இடங்களில் சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய அநீதியைப் போக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

எனவே, நீட் தேர்வினால் இழைக்கப்பட்டு வரும் அநீதியைப் போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிரமாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நீட் தேர்விற்கு மாற்றாக எந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவது என்பது குறித்து வல்லுநர் குழுவை அமைத்து, அவர்களது பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அமைந்திட, குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News