செய்திகள்
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலி கம்பங்களை யானைகள் சாய்த்துள்ள காட்சி.

குடியாத்தம் அருகே வயல்வெளியில் புகுந்து 9 காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2020-11-21 14:30 GMT   |   Update On 2020-11-21 14:30 GMT
குடியாத்தம் அருகே வயல்வெளியில் புகுந்த 9 காட்டுயானைகள் பயிர்களை நாசம் செய்ததுடன், பள்ளி சுற்றுச்சுவரையும் உடைத்தன.
குடியாத்தம்:

குடியாத்தம் வனப்பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளது. இதனால் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அந்த யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனர். இருப்பினும் அந்த யானைகள் கூட்டம் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 4 யானைகள் குடியாத்தம் அருகே ரங்கசமுத்திரம் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. மறுபக்கத்தில் சுற்றுச்சுவருக்கு பதில் கம்பங்களை நட்டு அமைக்கப்பட்டிருந்த வேலியில் ஏராளமான கம்பங்களை தள்ளி விட்டு அருகிலிருந்த நெல் வயலுக்குள் புகுந்து சுமார் ½ ஏக்கர் நெற்பயிரை சேதப்படுத்தியது.

அதேபோல் விநாயகம் என்பவரது வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து குப்பகொட்டூர் பகுதியில் ரவி என்பவரது நிலத்தில் வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன், ரங்கசமுத்திரம் பகுதியில் பைப் லைன், கல் கம்பங்களை உடைத்து நாசமாக்கியது.

இதேபோல் மற்றொரு 5 யானைகள் கொண்ட கூட்டம் டி.பி.பாளையம் பகுதியில் கங்காதரன் என்பவரது கரும்பு தோட்டத்தில் புகுந்து சுமார் ½ ஏக்கர் கரும்பு பயிர்களையும், வேலு என்பவரது நிலத்தில் புகுந்து சுமார் ஒரு ஏக்கர் நெற்பயிரையும் நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் நீலகண்டன், சுப்பிரமணி, கணேசன், வனராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்ட வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் பல மணி நேரம் போராடி யானை கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

2 நாட்களுக்கு முன்பு பரதராமி அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே அருகே வந்த காட்டு யானைகள் இரவு முழுவதும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் இரவு வேளைகளில் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News