செய்திகள்
சீமான்

பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பை தடுக்க வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்

Published On 2021-10-30 08:45 GMT   |   Update On 2021-10-30 08:45 GMT
தி.மு.க. அரசு விழித்துக் கொண்டு, உபரி நீர் என்ற பெயரில், முல்லைப் பெரியாற்றுப் பாசன நீரினைத் தேவையில்லாமல் கடலில் கலக்கச் செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளா மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் அத்து மீறி முல்லைப் பெரி யாறு அணையை வலுக்கட்டாயமாகத் திறந்திருப்பது தமிழ் நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டத் தாக்குதலேயாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியதென்பது பல ஆண்டுகள் காத்திருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி, பொறியியல் வல்லுநர்களின் பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் அணை வலுவாக உள்ளது என்று நிறுவி, கடுமையான சட்டப்போராட்டம் செய்த தன் விளைவாகக் கிடைத்த வாழ்வாதார உரிமையாகும். அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைப்பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உச்சநீதிமன்றமே நவம்பர் 11 வரை அணையின் நீர்மட்டத்தை 139.5 அடி வரையில் சேமிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், அதை எட்டும் முன்பாகவே அணையிலிருந்து நீர்திறப்பதை தமிழ்நாடு அரசு எவ்வாறு அனுமதித்தது?

இனியாவது தி.மு.க. அரசு விழித்துக் கொண்டு, உபரி நீர் என்ற பெயரில், முல்லைப் பெரியாற்றுப் பாசன நீரினைத் தேவையில்லாமல் கடலில் கலக்கச் செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கேரளாவின் அத்துமீறலை உடனடியாக உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று சட்டப்போராட்டம் நடத்தி, இழந்த முல்லைப் பெரியாற்று உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதையும் படியுங்கள்... சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு 250 கிராம் தீபாவளி இனிப்பு

Tags:    

Similar News