செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேட்டில் இன்று காய்கறி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்தது

Published On 2020-03-25 07:16 GMT   |   Update On 2020-03-25 07:16 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் 10 ரூபாய் குறைந்து காணப்பட்டது. சில்லரை விற்பனையில் காய்கறி விற்கப்படவில்லை.
சென்னை:

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் நுழையும் அனைத்து லாரி- வேன்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. இன்று சுமார் 5000 டன் காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வந்தது.

இவை அனைத்தும் மொத்த விற்பனையாகவும், சிறு மொத்த விற்பனையாகவும் இன்று நடந்தது.

இதன்படி வியாபாரிகளுக்கும் மளிகை கடைகாரர்களுக்கும் மட்டுமே காய்கறி விற்கப்பட்டது. குறைந்தது 1 கிலோ அல்லது அதற்கு மேல் காய்கறி வாங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே காய்கறி விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் காய்கறி விற்கப்படவில்லை.

மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளின் விலையும் 10 ரூபாய் குறைந்து காணப்பட்டது.

கோயம்பேடு சிறுமொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் முத்துக்குமார் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க ஏராளமான பொதுமக்கள் நேற்று திரண்டுவிட்டதால் சில வியாபாரிகள் விலையை ஏற்றி விற்க அரம்பித்து விட்டனர். இது தவறுதான். இதனால் இன்று நாங்கள் சில கட்டுப்பாடுகளை விதித்து வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகளை விற்க முடிவு செய்தோம்.

1 கிலோவுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மட்டுமே காய்கறி விற்பனை நடந்தது.

இதனால் இன்று மார்க்கெட்டில் கூட்டம் இல்லாமல் விற்பனை நடந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கும் விலையை விட மற்ற பகுதிகளில் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்றால் நியாயமான விலை என்று கருதலாம். அதையும் தாண்டி அதிக விலைக்கு விற்றால் அது அநியாய விலையாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் அதிகாலை 3 மணி முதல் மொத்த விற்பனை கடைகள் முழுமையாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சில்லரை விற்பனை கடைகள் மிகவும் குறைந்த அளவே திறக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விற்பனை கடைகள் அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் சில்லரை விற்பனை கடைகள் காலை 10மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் மார்கெட் மேனேஜிங் கமிட்டி முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதை மீறி கடையை திறக்கும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News