செய்திகள்
அமைச்சர் தங்கமணி

மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்- அமைச்சர் தங்கமணி தகவல்

Published On 2019-09-29 10:36 GMT   |   Update On 2019-09-29 10:36 GMT
தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தில் ரே‌ஷன்கடை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, புதிய ரே‌ஷன்கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடி அகழாய்வை பொறுத்தவரையில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டு இருக்கிறது. மத்திய அரசோடு இணைந்து அகழாய்வு துறை அதிகாரிகளை வைத்து முறையாக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. நாட்டின் நலன் கருதி அதனுடைய பழமை வாய்ந்ததை அரசியல் ஆக்காமல் பார்க்க வேண்டும் என்பதே எங்களுடைய கருத்து.

தற்போது தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகள் 2 ஆயிரம் மதுபான கூடங்கள் உள்ளன. மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கை ஆகும். அதன்படி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும். மேலும் மதுபான கூடத்திற்கான (பார்) டெண்டர் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும்.

ஆண்டுக்கு 10 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டம். சட்டசபையில் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அரசாணை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். அதன் பின்னர் அக்டோபர் மாதம் முழுவதும் யார் வேண்டுமானாலும் மின் இணைப்புகள் கேட்டு மனுக்களை கொடுக்கலாம். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்படும்.

அரசு மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு உள்ளது. விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News