செய்திகள்
துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தை படத்தில் காணலாம்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2021-01-09 22:57 GMT   |   Update On 2021-01-09 22:57 GMT
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மன்சூரலிகான் (வயது 27), யாகாலீக் (68), தமீம் அன்சாரி (49), முகமது உசேன் (30), யூசுப் (67), புதூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (38) ஆகிய 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

இதற்கிடையே 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பை, பவர் பங்க் ஆகியவற்றை சோதனை செய்தனர்.

அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள், சவூதி ரியால்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, 6 பேரிடமும் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தமீம் அன்சாரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மற்ற 5 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News