செய்திகள்
பிரபு- சீமான்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2020-10-21 09:22 GMT   |   Update On 2020-10-21 09:22 GMT
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இடிகரை:

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம், தென்றல் நகர், ராக்கிபாளையம் பிரிவு, வீரபாண்டி பிரிவு, பிரஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் அதிகரித்து வந்தது. இதுகுறித்து கோவை மாவட்ட சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில், பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அத்திப்பாளையம் பிரிவு அருகே இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் விராலிப்பட்டியை சேர்ந்த சீமான் என்ற அழகுமுருகன் (வயது 36), நியூ எல்லீஸ் நகரை சேர்ந்த பிரபு (33) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் சீமான் மீது கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், பிரபு மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை 2 பேரையும் கைது செய்தனர்.

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் கோவையில் தங்கியிருந்து பகலில் கட்டிட வேலைக்கு செல்வதும், இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
Tags:    

Similar News