தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்பட்டதை மே மாதமே அரசுக்கு தெரிவித்தோம் வாட்ஸ்அப் விளக்கம்

Published On 2019-11-02 06:59 GMT   |   Update On 2019-11-02 06:59 GMT
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தகவல்கள் திருடப்பட்டது பற்றி ஏற்கனவே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது.



இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்று உறுதி அளித்துள்ளது.



உளவு பார்த்தது தெரிந்த உடனேயே அந்த மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஒ. நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எசுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது" என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags:    

Similar News