செய்திகள்
ரபடா - குயிண்டன் டி காக்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன்னில் வெற்றி

Published On 2021-06-30 07:31 GMT   |   Update On 2021-06-30 07:31 GMT
5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தது.

செயின்ட் ஜார்ஜ்:

வெஸ்ட் இண்டீஸ்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 168 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 51 பந்தில் 71 ரன்னும் (5பவுண்டரி, 2 சிக்சர்), வான்டர் டூசன் 24 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 4 விக்கெட்டும், பிராவோ 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீசுக்கு 15 ரன் தேவைப்பட்டது. ரபடா வீசிய அந்த ஓவரில் முதல் பந்து வைடானது. அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. 2-வது பந்தில் ஆலன் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் ரன் கொடுக்கவில்லை. 4-வது பந்தில் 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி 2 பந்தில் 8 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ரபடா அபாரமாக யார்க்கர் வீசி ரன் கொடுக்கவில்லை. கடைசி பந்தில் ஆலன் சிக்சர் அடித்தார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருந்தது. 4-வது போட்டி நாளை நடக்கிறது.

Tags:    

Similar News