செய்திகள்
டெங்கு கொசு

மாணவிக்கு டெங்கு பாதிப்பு: ஆலங்குளம் பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு

Published On 2019-11-27 10:32 GMT   |   Update On 2019-11-27 10:32 GMT
ஆலங்குளம் அருகே மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பாடசாலை தெருவை சேர்ந்தவர் அப்ரானந்தம். இவரது மகள் சுமித்ரா (வயது 8). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சுமித்ராவிற்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மர்மக்காய்ச்சல் காரணமாக தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதிகளில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறையில் போதிய அளவு மஸ்தூர் பணியாளர்கள் இல்லாததால் நோய் தடுப்பு பணிகள் செய்ய முடியாமல் உள்ளனர். இந்த காய்ச்சலுக்கு மோசமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவது முக்கிய காரணமாகும். எனவே இந்த பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபடவும், அரசு தரப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தி நிலவேம்பு கசாயங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இந்த நிலையில் இன்று அந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News