ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் அச்சமின்றி வந்து சாமி தரிசனம் செய்யலாம்

Published On 2021-11-23 08:56 GMT   |   Update On 2021-11-23 12:40 GMT
திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
திருமலை அன்னமயபவனில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-

திருமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. கடந்த 18-ந்தேதி முதல் தரிசன டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்களுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

வருகிற 30-ந்தேதிக்கு பிறகு சாமி தரிசனத்துக்கு வர விரும்பும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை சாப்ட்வேர் அப்ளிகேஷனில் 6 மாதங்களுக்குள் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். தற்போது இலவச தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஆர்ஜித சேவைகள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

திருமலையில் ஓரிரு இடங்களில் தான் கனமழை பெய்தது. இதனால், பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை. அலிபிரியில் இருந்து திருமலை வரை நடைபாதையில் 13 இடங்களில் சேதம் ஏற்பட்டது. தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்களும் விழுந்தது. அவை, அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் அச்சமின்றி நடந்து வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

திருமலை-திருப்பதி, திருப்பதி-திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரு மலைப்பாதைகளிலும் கடந்த 4 நாட்களாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் வந்து ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

அலிபிரி நடைபாதை தற்போது நன்றாக இருக்கிறது. பக்தர்கள் நடந்து திருமலைக்கு செல்லலாம். ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பெரிய பாறைகள் மோதி படிகட்டுகள் சேதம் அடைந்திருந்தது.

ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சரி செய்வதற்காக வாகனங்களில் தேவையானப் பொருட்களை கொண்டு செல்ல சரியான பாதை வசதி இல்லை. ஏற்கனவே இருக்கிற பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது. நடைபாதையை சரி செய்ய தேவையான கூலியாட்களும் கிடைக்கவில்லை.

இதனால் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து செல்ல தற்காலிக ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பணி நிறைவு பெறும் வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

25-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கணித்துள்ள நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான பொறியியல், வனவியல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் உள்ளனர்.

மீட்புப்பணிகளில் பயன்படுத்த கூடிய பொக்லைன் எந்திரம், லாரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மலைப்பாதைகளில் திடீரென மரங்கள், பாறைகள் சரிந்து விழுந்தால் விரைந்து சென்று அகற்ற தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள நாராயணகிரி தங்கும் விடுதியில் 2 அறைகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளன. திருமலையில் மீதமுள்ள 7 ஆயிரம் அறைகளில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. கனமழையின்போது கம்ப்யூட்டர்கள் தொடர்பான சர்வர்கள் செயலிழக்காமல் இருக்க, போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஐ.டி. துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்னதானம், கல்யாணக் கட்டா, கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. பக்தர்கள் தயக்கமின்றி, அச்சமின்றி திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News