ஆன்மிகம்
திருமலை ஆகாச கங்கை

திருமலை ஆகாச கங்கையில் ஆஞ்சநேயரின் பிறப்பிடத்தில் பூங்கா அமைக்க ஏற்பாடு

Published On 2021-11-29 07:52 GMT   |   Update On 2021-11-29 07:52 GMT
ஆகாச கங்கை பூங்காவுக்கு செல்லும் பாதையில் பக்தர்கள் மழை, வெயிலில் சிரமப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்படும். அந்தப் பாதையில் ஓரமாக பக்தர்களின் ஓய்வறைகளும் அமைக்கப்படும்.
திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பேசியதாவது:-

அஞ்சனாதேவிக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். பக்தர்கள் அனுமன் என்றும் அழைப்பர். அனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் ஆகும். அனுமன் பாலகனாக இருந்தபோதே சூரிய பகவானிடம் அனைத்து வேத உபதேசங்களையும் கற்று, கிஷ்கிந்தா ராஜ்ஜியத்தில் சுக்ரீவனின் அமைச்சரவையில் மந்திரியாகப் பணியாற்றினார்.

அனுமன் பிறந்த இடமான திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் நவீன தொழில்நுட்பத்துடன் அனுமன் பிறந்த கதையை, வரலாற்றை இன்றைய இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதி பேசி ஒலி (ஆடியோ) வடிவில் ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்யப்படும். பூங்கா அருகில் தியான மண்டபமும் கட்டப்படும்.

ஆகாச கங்கை பூங்காவுக்கு செல்லும் பாதையில் பக்தர்கள் மழை, வெயிலில் சிரமப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்படும். அந்தப் பாதையில் ஓரமாக பக்தர்களின் ஓய்வறைகளும் அமைக்கப்படும். அதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மய்யா, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, தேவஸ்தான கட்டிடவியல் துறை பொறியாளர் நாகேஸ்வரராவ், அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் அகெல்லா விபீஷணசர்மா, கலை இயக்குனர் ஆனந்தசாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News