செய்திகள்
‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பல் மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காண

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

Published On 2020-11-12 18:46 GMT   |   Update On 2020-11-12 18:46 GMT
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
மும்பை:

இந்திய கடற்படைக்கு ஸ்கார்ப்பீன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடற்படையின் ‘திட்டம்-75’-ன் கீழ் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல்களை பிரான்ஸ் கடற்பாதுகாப்பு மற்றும் எரிசக்தி நிறுவனமான டி.சி.என்.எஸ் வடிவமைத்து, மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகை கப்பல்களில் ‘கல்வாரி’, ‘கந்தேரி’ ஆகிய 2 கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு உள்ளன. 3-வது கப்பலான ‘கரஞ்ச்’ இறுதிக்கட்ட கடற்சோதனையில் உள்ளது. 4-வது கப்பலான ‘வேலா’ தனது கடல் சோதனையை தொடங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் 5-வது நீர்மூழ்கி கப்பலான ‘வாகிரின்’ தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து சோதனை ஓட்ட பணிகளுக்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. அவை முடிந்ததை தொடர்ந்து இந்த கப்பலும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

மும்பையில் நடந்த இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டத்தை, மந்திரியின் மனைவி விஜயா காணொலி காட்சி மூலமே தொடங்கி வைத்தார்.

இந்த ஸ்கார்ப்பீன் வகை நீர்மூழ்கி கப்பல்களால் தரை இலக்குகள் எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, உளவுத்தகவல் சேகரிப்பு, பிராந்திய கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக மேம்பட்ட ஒலி உறிஞ்சுதல் நுட்பம் போன்ற சிறந்த தந்திர நடவடிக்கைகளை இந்த நீர்மூழ்கி மேற்கொள்ளும்.

அந்த அடிப்படையில் ஆழ்கடல் மணல் பரப்பில் சிறப்பாக வேட்டையாடும் மீனான ‘வாகிரின்’ பெயரை இந்த நீர்மூழ்கிக்கும் வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரஷியாவிடம் இருந்து கடந்த 1973-ம் ஆண்டு வாங்கப்பட்ட நீர்மூழ்கி ஒன்றுக்கு வாகிர் என பெயர் சூட்டப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருந்தது. அது 2001-ம் ஆண்டுவரை பணியில் இருந்தது.

இந்த ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி களை கட்டுவது உண்மையிலேயே சவாலாக இருந்ததாகவும், குறிப்பாக மிகவும் நெரிசலான இடத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் அடக்க வேண்டியிருப்பதால் மிகவும் சிக்கலாக இருந்ததாவும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்.டி.எல்.) தெரிவித்து உள்ளது.

வாகிர் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியிருப்பதன் மூலம், நீர்மூழ்கி கப்பல் கட்டும் திறனில் இந்தியாவின் நிலை இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக எம்.டி.எல். குறிப்பிட்டு உள்ளது. இது சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

கடந்த 1992-94-ம் ஆண்டு காலகட்டத்தில் எம்.டி.எல். கட்டிய 2 நீர்மூழ்கி கப்பல்கள் இன்னும் படையில் இருப்பதன் மூலம், எம்.டி.எல்.லின் திறன் நிரூபணமாகி இருப்பதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஸ்கார்ப்பீன் வரிசை நீர்மூழ்கி கப்பல்களில் 6-வது கப்பலான வக்‌ஷீரும், சோதனை ஓட்டத்துக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News