பெண்கள் மருத்துவம்
மெனோபாஸ் அறிகுறிகள்

மெனோபாஸ் ஆரம்ப அறிகுறிகளும் - தீர்வும்

Published On 2021-12-01 08:32 GMT   |   Update On 2021-12-01 08:32 GMT
பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
40 வயதைக் கடந்த பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார்கள் அல்லது அடிக்கடி சோர்ந்து காணப்படுகிறார்கள் என்றால், அது மெனோபாஸுக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்கிற புரிதல் அவசியம். பெண்களுக்கு மெனோபாஸ் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம் என்றால், மெனோபாஸுக்குப் பிறகான சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும்போதே அவர்கள் சினைப்பையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகள் இருக்கும். இந்தச் சினைப்பையில்தான் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்டிரான் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், ஒரு பெண் பூப்பெய்துதலில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை முதிர்வடைந்து வெளியிடப்படுவதும் மாதவிடாய் சுழற்சியும் நடக்கும். பெண்களுக்கு  குறிப்பிட்ட வயதுக்கு மேல் சினைப்பை கருமுட்டை வெளியிடுவதை நிறுத்தும்போது, மாதவிடாய் நின்றுவிடும். தொடர்ந்து ஓராண்டுக்கு மாதவிலக்கு இல்லை என்ற நிலையை மெனோபாஸ் என்கிறோம்.

பெண்களின் உடல்நிலை, மரபு ஆகியவற்றைப் பொறுத்து, மெனோபாஸ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் நிகழலாம். பொதுவாக, 49 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு, ஒரு வருடத்துக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சி நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸ் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். சிலருக்குச் சீரற்ற சுழற்சி காரணமாகவும் மாதவிடாய் தள்ளிப்போகலாம் என்பதால், ஆறு மாதங்கள் வரை மாதவிடாய் நிகழாமல் இருந்தால், அதை மெனோபாஸாகப் பொருட்படுத்தத் தேவையில்லை.

சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, 15 நாள்களுக்குள் மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல்… இவை யாவும் இதன் அறிகுறிகள்.
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு இயல்பாகவே ‘மூட் ஸ்விங்’ ஏற்படலாம். இதனால் சோர்ந்துபோவது, பயம், பதற்றம், தூக்கமின்மை, ஞாபகமறதி இவையெல்லாம் அளவுக்கு அதிகமாக நிகழலாம்.

கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் எலும்புத் தேய்மானமும், மூட்டுவலியும் உண்டாகலாம். ஆதலால் இந்தக் காலகட்டத்தில் எலும்புகளுக்குப் பலம் சேர்க்கும்விதமாகக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளலாம்.

சிலருக்கு 30 வயதைத் தாண்டியதுமே மெனோபாஸ் அறிகுறிகள் தென்பட வாய்ப்புண்டு. அதனால் அப்போதிருந்தே ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைத் தரக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
Tags:    

Similar News